×

இங்கிலாந்து - பிரான்ஸ் மோதல்: இது பைனல் மாதிரி!

கத்தார் உலக கோப்பையில் மிக பலம் வாய்ந்த 2 அணிகள் மோதும் காலிறுதி என்றால், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியுடன் இங்கிலாந்து மோதும் இந்த போட்டி தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலக கோப்பை போட்டியில் இந்த 2 நாடுகளும்  16வது முறையாக  களம் கண்டுள்ளன. இங்கிலாந்து  1966ல் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  

அதன் பிறகு அரையிறுதியை  தாண்ட முடியவில்லை. கடந்த 56 ஆண்டுகளாக கை நழுவிச் செல்லும் உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் கேப்டன் ஹாரி கேன் தீவிரமாக இருக்கிறார். லீக் சுற்றில் ஈரான், வேல்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி, அமெரிக்காவுடன் டிரா கண்ட இங்கிலாந்து, ரவுண்டு ஆப் 16ல் செனகலை 3-0 என வீழ்த்தி கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

அதற்குக் கொஞ்சமும் குறையாத வேகத்தில் உருமுகிறது நடப்பு சாம்பியன் பிரான்ஸ். தரவரிசையில் 4வது இடத்தில்  இருக்கும்  பிரான்ஸ்,  5வது இடத்தில் உள்ள  இங்கிலாந்தை காலிறுதியில் எதிர்கொள்கிறது.  உலக கோப்பையில் 2 முறை கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ், 2006ல் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளை பதம் பார்த்த பிரான்ஸ், கடைசி லீக் ஆட்டத்தில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

எனினும், ரவுண்டு ஆப் 16ல் போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ள ஹியூகோ லோரிஸ்  தலைமையிலான பிரான்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள எம்பாப்பே, கிரவுடு, கிரீஸ்மேன் போன்ற நட்சத்திர வீரர்களை சமாளிப்பது இங்கிலாந்து அணிக்கு சவாலாகவே இருக்கும். இந்த 2 அணிகளும் 31 சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இங்கிலாந்து 17 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.  எஞ்சிய 9 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

இத்தனை ஆட்டங்களில் இரு அணிகள் மோதியிருந்தாலும் அவற்றில் இரண்டே இரண்டு முறைதான் உலக கோப்பையில் சந்தித்துள்ளன. அந்த 2 முறையும் இங்கிலாந்துதான் வென்றுள்ளது. ஐரோப்பிய மலைகள் மோதும் இந்த கடைசி காலிறுதி, பைனல் மாதிரி பரபரக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : England ,France , England - France Clash: It's like a final!
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்