தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைக்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதியானது எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பெயரை குறிப்பிட்டோ அல்லது இரட்டை இலை சின்னத்தை தெரிவித்தோ கட்சி பணிகளில் எந்தவித இடையூறுகளையும் விளைவிக்க கூடாது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை பதிவேற்றம் செய்யாமல் தேர்தல் ஆணையம் இருக்கிறது. அதனால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: