மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி கேள்வி: டிரோன் உற்பத்தி ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?

புதுடெல்லி: ‘ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் (டிரோன்) உற்பத்தியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், புதிய முன்மாதிரி முயற்சியாக ஆளில்லா விமானங்களுக்கென ‘தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம்’ தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி கடந்த ஜனவரி 25ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ‘ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை’ தொடங்கி வைத்தார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள டாக்டர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையமானது, பேரிடர் மேலாண்மை, விவசாயம், கட்டுமான கண்காணிப்பு, வரி திட்டமிடல், சுகாதாரம், வானவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற அரசு துறைகளின் பல்வேறு தேவைகளுக்கும், சமூக பயன்பாடுகளுக்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் வகையில் ஆளில்லா விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் டிரோன் உற்பத்தியை ஊக்குவிக்க ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரங்கள் வருமாறு:

* ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) மற்றும் ஆளில்லா விமானங்களின் (டிரோன்) உற்பத்தியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா?

* வணிக தளவாடங்கள், விவசாயம், சுரங்கம், பெரிய அளவிலான விவரணையாக்கம் மற்றும் தொழில்துறை ஆய்வு ஆகியவற்றிற்கான டிரோன் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?

* ராணுவ பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிக்காக டிரோன்கள் தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா?

* ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கான சந்தை வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* வணிக நோக்கங்கள் மற்றும் தளவாடங்களுக்காக ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் பரிசீலிக்கப்படுகின்ற கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் என்னென்ன?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: