மக்களவையில் மசோதா தாக்கல்: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்கள்

புதுடெல்லி: தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை சேர்ப்பதற்கான அரசியலமைப்பு (பழங்குடியினர்) ஆணை 2வது திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.  இதைத் தொடர்ந்து, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்திடும் அரசியலமைப்பு (பழங்குடியினர்) ஆணை 2வது திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், தமிழகத்தில் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு, சட்டீஸ்கர், கர்நாடகா, இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் சில பிரிவினரை சேர்க்கும் வகையிலான 3 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Related Stories: