நடப்பு நிதியாண்டில் ரூ.3.25 லட்சம் கோடிக்கான துணை மானிய கோரிக்கை: மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25 லட்சம் கோடி செலவழிப்பதற்கான ஒப்புதல் கோரி, துணை மானிய கோரிக்கை மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் துணை மானிய கோரிக்கையை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதில், ரூ.4.36 லட்சம் கோடிக்கான கூடுதல் செலவினங்களுக்கு அவையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ரூ.4.36 லட்சம் கோடியில் ரூ.1.10 லட்சம் கோடி அமைச்சங்கள் மற்றும் துறைகளின் செலவு குறைப்பு சேமிப்பு மூலம் திரட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3.25 லட்சம் கோடி கூடுதல் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், உர மானியத்திற்காக ரூ.1.09 லட்சம் தேவைப்படுகிறது. ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கு ரூ.80,348.25 கோடி தேவைப்படுகிறது. மேலும், தொலை தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சகங்களின் செலவு தேவைகளைப் பூர்த்தி செய்ய முறையே ரூ.13,669 கோடி, ரூ.12,000 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.10,000 கோடியும் தேவைப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.4,920 கோடி உட்பட ஊரக வளர்ச்சி அமைச்சத்திற்கு ரூ.46,000 கோடி கூடுதல் பணம் தேவைப்படுவதாக துணை மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: