கொலிஜியம் அமைப்பு விவாதங்களை பொதுமக்கள் பார்வைக்கு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு நடத்தும் விவாதங்களை பொதுமக்கள் பார்வைக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளை நியமிப்பது மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் மேற்கொள்வது தான் நடைமுறை வழக்கமாக தற்போது வரையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவ்வாறு உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அஞ்சலி பரத்வாஜ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில்,‘‘உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் வெளியிட்டதை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் இரண்டு தலைமை நீதிபதியை உயர்த்தியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அது தவறான ஒன்றாகும். குறிப்பாக கொலிஜியம் எந்த விவாதம் செய்தாலும் அது இறுதி முடிவு என்று கூற முடியாது. அதனை நாங்கள் தான் இறுதி செய்ய வேண்டும். அதுவரை அனைத்து விவாதங்களும் தற்காலிக முடிவுகள் என்று தான் கூற முடியும். மேலும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பில் நடத்தப்படும் விவாதங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பார்வைக்கு கண்டிப்பாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் கொலிஜியம் அமைப்பு என்பது பொதுத்தளமாக இருக்க முடியாது. மேலும் கொலிஜியம் அமைப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களும் மற்றும் அதில் இடம்பெறும் உறுப்பினர்களின் கைெயாப்பங்கள் ஆகியவை மட்டுமே இறுதி முடிவாகும். பின்னர் தான் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: