ரவுடிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டது

சென்னை: ரவுடிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க வைத்து, அதனை செயலிழக்கச் செய்தனர். சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கடந்த 3ம்தேதி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வாகன சோதனையில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (31) மற்றும் செங்குன்றம் பகுதியை சேர்ந்த விக்கிரமாதித்தன் (37) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். இவர்களது, காரில் 34 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புளியந்தோப்பை சேர்ந்த பாம் சரவணன் (எ) ரவுடியை கொலை செய்வதற்காக இவர்கள் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

போலீசார் இவர்களை பிடிக்கும்போது தப்பித்து ஓடி கை, கால் உடைந்த நிலையில் 2 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டது. இதை நேற்று எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மேற்பார்வையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் மருதம் கமாண்டோ வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு கமாண்டோ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தீவிரமாக ஆராய்ந்து யாருமில்லாத பகுதியில் வெடிக்க செய்து செயலிழக்கச் செய்தனர்.

Related Stories: