நாகப்பட்டினம், காரைக்காலில் கடல் சீற்றம்; குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

நாகப்பட்டினம்: மாண்டஸ் புயல் எதிரொலியால் நாகப்பட்டினம், காரைக்காலில் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.  நாகூர் அருகே பட்டினச்சேரி கிராமத்தில் கடல் சீற்றம் காணப்பட்டு 12 அடி உயரத்துக்கு மேல் ஆக்ரோஷமாக அலைகள் எழும்பியதால் கரையோரம் இருந்த 3 தென்னை மரங்கள் விழுந்தது. 1 மின்கம்பம் சரிந்து விழுந்தது. அலையின் அதீ வேகத்தின் காரணமாக கடற்கரையோரத்தில் உள்ள கூரை வீடுகளில் கடல் நீர் உட்புகுந்ததால் வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிர்த்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் கடல் நீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் தொடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், புயல் பாதுகாப்பு மையத்திலும் தங்கி உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் கரையோர பகுதிகளில் சுமார் 50 மீட்டர் அளவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியது. கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை: ‘மாண்டஸ்’ புயல் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கி விடிய, விடிய பெய்தது. சூறைக்காற்று வீசியதால் கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலை பகுதியில்  டிரான்ஸ்பார்மர் மீது மரம் விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஒரு சில இடங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் இரவு முழுவதும் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர்  மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நேற்று காலையும் சூறைக்காற்றுடன் மழை தொடர்ந்ததால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததால்  போக்குவரத்து பாதித்ததுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானல் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். சூறைக்காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.  நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: