×

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் நள்ளிரவு கரை கடந்தது: 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி- மாமல்லபுரம்  இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்று மேற்கு நோக்கி புயல் நகர்ந்ததால் புதுச்சேரி-  மாமல்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இது, நாளை பெங்களூரு வழியாக கடந்து சென்று  12ம் தேதி அரபிக் கடலுக்குள் செல்லும். இருப்பினும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் நேற்று முன்தினம் இரவில் மாண்டஸ் புயலாக மாறியது.

பின்னர் நள்ளிரவில் அதிதீவிர புயலாக மாறியது. அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காலையில் அந்த புயல் வலுவிழந்து சாதாரண புயலாகவே நீடித்துக் கொண்டு இருந்தது. பகல் 11 மணிக்கு மேல்  மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தது. முன்னதாக, இந்த புயல் புதுச்சேரிக்கும் ஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காலையில் இருந்து மாண்டஸ் புயல் 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. இதனால் கடலோரத்தை நெருங்க 6 மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக் கொண்டது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சென்னைக்கு  தெற்கே 200 கிமீ தொலைவில் நிலை கொண்டது. இதன் காரணமாக சென்னை மெரினாவில் பலத்த காற்று வீசியது. மணிக்கு 75 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நகரில் பல பொருட்கள் காற்றில் பறந்தன. குறிப்பாக மாடியில் போடப்பட்டிருந்த தகரம் பெயர்த்து எடுக்கப்பட்டு தூரமாக போய் விழுந்தன. காற்றுடன் மழையும் சேர்ந்து விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. நேற்று மாலை 6 மணி வரை கடலோரப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர் காற்றும் வீசியதால் பொதுமக்கள் பெரும்பாலும் வெளியில் வராமல் வீட்டுக்குள்  முடங்கினர். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பலத்த காற்று வீசியதுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. வட உள் மாவட்டங்களிலும் காற்று வீசியது.

நில நடுக்கோட்டுப் பகுதியில் இருந்து வரக்கூடிய நீராவிக் காற்று வருவதில் இடையில் தடை ஏற்பட்டதால் மழை விட்டு விட்டு பெய்தது. மதியம் 3.30 மணிக்கு பிறகு அந்த நீராவிக் காற்று புயலை நோக்கி வந்தது. அதற்கு பிறகு மேக உற்பத்தி ஏற்பட்டு மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், மாண்டஸ்  புயல் மதியத்துக்கு பிறகு சென்னைக்கு 220 கிமீ தொலைவில் வரும் போது  தனது திசையை மாற்றி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று இரவு 9.30 மணிக்கு ஆரம்ப நிலை புயல் பகுதி கரையை தொட்டது. அந்த நேரத்தில் மாமல்லபுரம் முதல் ராணிப்பேட்டை வரை 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. 12 மணிக்கு மேல் கரையைக் கடந்தது. கரையை நெருங்கும் போது அதிக அளவில் மழை பெய்தது. பிறகு தரைப்பகுதிக்குள் நுழைந்த போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதீத மழை பெய்தது.

மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து வரும் காற்று, கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று ஆகியவற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவில் மட்டும் நல்ல மழை பெய்தது. இந்த புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்து பெங்களூரு வழியாக சென்று 12ம் தேதி அரபிக் கடலுக்குள் நுழையும். இந்த ஆண்டுக்கான பருவமழையில் உருவான முதல் புயலான மாண்டஸ்  காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய மழையை கொடுக்காமல் இந்த புயல் சென்றுவிட்டது. இதையடுத்து, 16ம் தேதி உருவாகும் காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயல் அதிக மழை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட  13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cyclone Mantus ,Mamallapuram , Cyclone Mantus made landfall near Mamallapuram at midnight: 75 km. The wind blew fast
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...