×

“தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (9.12.2022) சென்னையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

சென்னையில் நேற்று (8.12.2022) தொடங்கிய காலநிலை மாற்ற மாநாட்டில் தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க மாநிலமாக மாற்றுவதற்குரிய வழிவகைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு உயர் அலுவலர்கள், காலநிலை மாற்ற வல்லுநர்கள் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், காலநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் 500 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களைச் நோக்கத்துடன், இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாடு நிறுவனத்தை (TNGCC) தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

மேலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசினைக் குறைத்தல், கடலோர வாழ்விடங்களைப் புனரமைத்தல், சதுப்புநிலக் காடுகள் மற்றும் பிற சிறப்பினங்களை உருவாக்குதல், கழிவுகளிலிருந்து எரிசக்தி, பசுமை மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உயிர்க்கவசங்களை உருவாக்குதல், காலநிலை கல்வியறிவு மற்றும் சீர்மிகு கிராமங்கள் தொடர்பான அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 2021-2023 ஆம் ஆண்டுகளில் 77.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மாவட்ட அளவில் காலநிலை இயக்கங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கையாக, மாவட்ட வன அலுவலர்கள் (DFO) காலநிலை அலுவலர்களாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம்: நிலையான சுற்றுலா மற்றும் ஆரோக்கியமான கடலோர நிருவாகத்தை திட்டமிடவும், மேம்படுத்தவும், கடற்கரைகளில் உள்ள மாசுக்களைக் குறைக்கவும் மற்றும் சர்வதேச தர அளவீட்டிற்கு கடற்கரைகளை உயர்த்தவும் தேவையான அம்சங்களுடன் கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தினை தமிழகத்தில் சீரிய முறையில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள பத்து கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், பத்து கடற்கரைகளில் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறுப்பினை தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தக் கடிதத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

திறன்மிகு கிராமங்கள் திட்டம்: சூரிய ஒளி ஆற்றலை முழு அளவில் பயன்படுத்துதல், காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை அளித்தல், கழிவு மற்றும் நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றம் பசுமை மேம்பாடு ஆகியவற்றினை கிராமங்களில் உருவாக்கி, அந்த கிராமத்தினை திறன்மிகு கிராமமாக மாற்றும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களைத் தேர்வு செய்து, அவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து செயல்படுத்த, உலக வள ஆதார நிறுவனத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஒப்பந்தக் கடிதத்தை வழங்கினார்.

பசுமைப் புத்தாய்வுத் திட்டம்: காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளவும், அதனை ஏற்று வாழ்வதற்குரிய பல்வேறு உத்திகளைக் கண்டறியவும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மாவட்டத்திற்கு உகந்த காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாவட்டந்தோறும் பசுமைத் திறனாளர்கள் தேர்வு செய்யும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காகவும், பசுமைத் திறனாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பினை, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்வி மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்பந்தக் கடிதத்தை வழங்கினார். பசுமைத் தொன்மங்கள் திட்டம்
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைத் தொன்மங்கள் திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தில் முதலாவதாக, தமிழகத்தில் இரு கோவில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாதிரி கோவில்களாக உருவாக்கப்படும். இவை மீள்திறன், நீர் உபயோகத்திறன், கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு வகையில் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடியவையாக மாற்றப்படும்.

பசுமைப் பள்ளிகள் திட்டம்: மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரங்களின் அருமை பெருமைகளை உணர்த்தவும், மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை உணரவும், மாநிலத்தில் 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் சூரிய ஒளி தகடுகளை அமைத்து, அதன்மூலம் பெறப்படும் மின்சாரத்தை பள்ளிகளின் பயன்பாட்டுக்கும், மின் மோட்டார் மூலம் அங்குள்ள மூலிகை, காய்கறித் தோட்டங்கள் அமைத்து, அப்பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையாக வருகிறது.

இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் திறன்மிகு காலநிலை கிராமங்கள், பசுமைப் பள்ளிகள், பசுமை தொன்மங்கள் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து, காலநிலை மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.

இவ்விழாவில்,  உயர்கல்வித் துறை அமைச்சர் ௧. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், இந்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான மான்டேக் சிங் அலுவாலியா, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹிம், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு. .ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத் தலைவர்) சையத் முஜம்மில் அப்பாஸ், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் திட்ட இயக்குநர் தீபக் பில்கி, காலநிலை மாற்றத் துறை வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Tamil Nadu Climate Change Movement ,Chief Minister ,K. Stalin , “Tamil Nadu Climate Change Movement”: Launched by Tamil Nadu Chief Minister M.K.Stalin.
× RELATED இது வழக்கமான தேர்தல் அல்ல… ஜனநாயக அறப்போர்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்