உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறை கைதிகளை கண்காணிக்க வார்டன்களுக்கு ‘பாடி கேமரா’: கட்டுப்பாட்டு அறைக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’: புழல் சிறையில் அறிமுகம்

சேலம்: தமிழகத்தில் மத்திய, மாவட்ட சிறைகளில் உயர் பாதுகாப்பு தொகுதியில் இருக்கும் கைதிகளை கண்காணிக்கும் வகையில் வார்டன்களுக்கு உடலில் அணிந்து செல்லும் வகையிலான பாடி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மத்திய சிறை உள்பட 136 சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தீவிரவாதிகள், ரவுடி கைதிகள் அடிக்கடி சிறையில் தகராறில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் வார்டன்கள் சோதனையிட செல்வார்கள். அப்போது அவர்களை திடீரென தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதன் உண்மை தன்மையை அறியும் வகையிலும், தகராறை தடுக்கும் வகையிலும் உடலில் அணிந்து செல்லும் வகையிலான ‘பாடி வேர்ன் கேமராக்கள்’ சிறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நேற்று இந்த பாடி கேமரா வார்டன்களுக்கு வழங்கப்பட்டது. சிறிய செல்போன் அளவில் இருக்கும் இந்த கேமராவை சட்டை பையின் மேல்பகுதியில் பொருத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை அணிந்து கொண்டு கைதிகள் மற்றும் அவர்களின் அறைகளை சோதனை செய்ய செல்லும்போது அனைத்து காட்சிகளும் அந்த பாடி கேமராவில் பதிவாகும். அப்போது கைதிகள் தகராறில் ஈடுபட்டால் அந்த காட்சிகளும் சிறையின் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும்.

சேலம் மத்திய சிறையில் இவ்வாறு காட்சிகள் பதிவாகிறது என்றால், சேலம் மற்றும் சென்னை சிறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் காட்சிகள் அனைத்தும் பதிவாகும். பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், உடனடியாக அதிகாரிகள் உஷாரடையும் வகையில் இந்த கேமரா பயன்படும். தற்போது 50 பாடி கேமராக்கள் ரூ.46 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது. இவை மத்திய சிறை மற்றும் மாவட்ட சிறைகளுக்கு இன்னும் ஒருவாரத்தில் அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக உயர்பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருக்கும் அறை பாதுகாப்புக்கு செல்லும் வார்டன்களுக்கு இது வழங்கப்படும்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த பாடி கேமராக்கள் பொருத்திச்செல்வதால் நடக்கும் காட்சிகளும், பேச்சும் லைவ்வாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். இதன்மூலம் கைதிகள் பொய் சொல்ல முடியாது. தகராறில் ஈடுபடுவது தெரியவந்தால் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும். அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிறைகளில் ஒருவாரத்தில் இந்த கேமராக பயன்பாட்டிற்கு வரும்’’ என்றனர்.

Related Stories: