கஞ்சா தேவாமிர்தம் போதையில் கல்லூரி மாணவரை கொல்ல முயற்சி: சென்னை வாலிபருக்கு வலை

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் புது டெக்னிக்கை பயன்படுத்தி கஞ்சாவை தேவாமிர்தம் என தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். அக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். அவருடன் அவரது ஊரை சேர்ந்த வேலைக்கு செல்லும் ஒரு வாலிபர், மற்றொரு மாணவர் என 3 பேர் தங்கியுள்ளனர். இதில், ஒரு மாணவருக்கு நண்பன் எனக் கூறிக்கொண்டு சென்னையில் இருந்து ரோசன்(21) என்ற வாலிபர் வந்துள்ளார்.

அவர் தான், சென்னையில் உள்ள கல்லூரியில் பட்டம் பயில்வதாக கூறியுள்ளார். அவர் வரும்போதே தனது பேக்கில் கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்தார். அறையில் ரோசன் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என இருவரும் கஞ்சா புகைத்துள்ளனர்.

இதை விரும்பாத மற்ற இருவரும் வெளியே சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் தங்களது அறைக்கு சென்றனர். அப்போது அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களுடன் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் நமது அறைக்கு வெளியாட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என தனது சக மாணவரிடம் கேட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ரோசன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து  மாணவரையும் அவரது நண்பனையும் அடித்து உட்கார வைத்து உள்ளனர். அப்போது ரோசன் மற்ற 3 பேரும் சேர்ந்து அவர்களிடமிருந்த கஞ்சாவை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு, அதற்குள் சோடா, கூல்டிரிங்கஸ் மற்றும் மாத்திரைகள் வேறு சில பொருட்களை போட்டு நன்றாக குலுக்கி அந்த பாட்டிலின் பக்கவாட்டில் ஒரு துளையிட்டு அதில் ஒரு சிறிய குழாயை சொருகி அதை உறிஞ்சியுள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அறையில் இருந்த இருவரையும் இது கஞ்சா தேவாமிர்தம் எனக்கூறி அதை உறிஞ்சும்படிகூறி அடித்து உதைத்துள்ளனர். வேறு வழியில்லாமல் ஒரு மாணவர் அதை உறிஞ்சி உள்ளார். உறிஞ்சியதும் அந்த மாணவன் போதையில் மயக்கமானார்.

வேலைக்கு செல்லும் மற்றொரு வாலிபரை போதை வாலிபர்கள் சரமாரியாக தாக்கி ஆடைகளை களைந்து பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்துள்ளனர். மயக்கமடைந்த மாணவரின் கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு மேலும் பணம்கேட்டு மிரட்டி தாக்கி உள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த வாலிபர் மற்றும் மாணவர் மயக்கம் தெளிந்த பின் நடந்த சம்பவங்களை் தங்களது குடும்பத்தினரிடம் சொல்லி அழுதனர்.

அதன்பேரில், ஊரிலிருந்து வந்த அவர்களது பெற்றோர்கள் மாணவர்களுடன் சம்பவங்களுக்கு காரணமாக இருந்த மற்றொரு மாணவனை பிடித்து வந்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போலீசார், அறையில் இருந்த கஞ்சா மற்றும் தேவாமிர்த பாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: