முகப்பேரில் பட்டப்பகலில் பயங்கரம்; பியூட்டி பார்லருக்குள் புகுந்து ஊழியர்களை கத்தியால் வெட்டி நகை, பணம் பறிப்பு: 10 பேர் கும்பலுக்கு வலை

அண்ணாநகர்: சென்னை முகப்பேர், எஸ்எம்டி நகரில் ஒரு தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு 5 பெண்கள், 5 ஆண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு, நேற்றிரவு பட்டாக்கத்திகளுடன் 10 பேர் மர்ம கும்பல் திடீரென புகுந்தது. அவர்களை பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண் ஊழியர்களை பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கினர். காயம் ஏற்பட்டது. இதில் பயந்து போன ஆண் ஊழியர்களிடம், நகைகள், பணம், செல்போன்களை தரும்படி மர்ம கும்பல் மிரட்டியது. உடனே 5 சவரன் நகைகள், 10 செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த ₹15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. பின்னர் அக்கும்பல் 3 பைக்குகளில் தப்பி சென்றது.

தகவலறிந்து திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் நொளம்பூர் போலீசார் விரைந்தனர். ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். புகாரின்பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: