அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பைக் மீது லாரி மோதல்: நிச்சயதார்த்த ஜோடி பலி: டிரைவர் கைது; அரும்பாக்கத்தில் சோகம்

அண்ணாநகர்: அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் சினிமா பார்த்து விட்டு திரும்பியபோது பைக் மீது லாரி மோதியதில் காதலன், காதலி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிலோனா (23). இன்ஜினியர். சென்னை ஜாபர்கான்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி, கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவரது உறவினர் பிரசாத் (33), ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தார். தற்ேபாது, சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, குன்றத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிந்தது. சம்மதம் தெரிவித்தனர். முறைப்படி அடுத்த மாதம் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு அண்ணாநகரில் உள்ள தனியார் மாலில் சினிமா பார்த்து விட்டு பாபிலோனாவும் பிரசாத்தும் பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதில் பாபிலோனாவும் பிரசாத்தும் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உடனே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலையை சேர்ந்த லாரி டிரைவர் பொன்னன் (42) என்பவரை கைது செய்தனர். இச்சம்பவத்தை அறிந்ததும் இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: