மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மேலும் 25 விமானங்கள் சேவை ரத்து: சென்னை விமான நிலையம்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மேலும் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஐதராபாத், ஹீப்ளி, கண்ணூர், உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திலிருந்து 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு செல்லும் ஏர்இந்தியா விமானம், இன்று அதிகாலை 5.25 மணியளவில் தூத்துக்குடி செல்லும் விமானம், மதியம் 12 மணியளவில் கடப்பா செல்லும் விமானம், இரவு 9.15 மணியளவில் மும்பை செல்லும் விமானம் என மொத்தம் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதேபோல் இலங்கையில் இருந்து அதிகாலை 4.30 மணியளவில் சென்னை வரும் விமானம், தூத்துக்குடியில் இருந்து காலை 9.35 மணியளவில் வரும் விமானம், மாலை 5.50 மணியளவில் கடப்பாவில் இருந்து வரும் விமானம் என மொத்தம் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும் இன்றிரவு வரை மேலும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: