இமாச்சலில் காங்கிரஸ் அபார வெற்றி; முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி?: சிம்லாவில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் அடிபடுகிறது. இன்று சிம்லாவில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார்.  இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜகவை தோற்கடித்து 43.90 சதவீத வாக்குகளைப் பெற்று 40 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் யார்? என்பது குறித்த விவாதம் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது.

அந்தப் பட்டியலில் சுக்விந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி, பிரதீபா சிங் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் அடிபடுகிறது. பிரதீபா சிங் எம்பியாக உள்ளார்; சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுக்விந்தர் சிங் சுகுவை பொருத்தமட்டில், கட்சியின் முன்னாள்  மாநிலத் தலைவராகவும், பிரசாரக் குழுத் தலைவராகவும் இருந்தவர்.

நடவுன்  தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முகேஷ்  அக்னிஹோத்ரியை பொருத்தமட்டில், நான்கு முறை எம்எல்ஏவாகவும் எதிர்க்கட்சித்  தலைவராகவும் உள்ளார். பிரதீபா சிங்கை பொருத்தமட்டில் இமாச்சல பிரதேச  முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி மற்றும் இமாச்சல் காங்கிரஸ்  தலைவரும் ஆவார். பாஜகவின் ராம் ஸ்வரூப் சர்மா மறைவுக்குப் பிறகு பிரதீபா  சிங் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களின் கூட்டம், இன்று மாலை சிம்லாவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்யப்படுகிறார். புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லாவும், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Related Stories: