திருச்சுழி அருகே சுற்றுச்சுவர் இல்லாத சாலையோர கிணறு-அச்சத்துடன் கடந்து செல்லும் மக்கள்

திருச்சுழி : திருச்சுழி அருகே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கும் கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே உள்ளது காளையார் கரிசல்குளம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் மேற்கு பகுதியில் பயன்பாடின்றி பாழடைந்து புதர் மண்டிய நிலையில் பெரிய அளவில் கிணறு ஒன்று பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கிணற்றின் பக்கவாட்டு சுற்றுசுவர் சேதமடைந்து உள்ளதால், இந்த வழியாக வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கிணற்றினுள் விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் கிணற்றை ஒட்டிய சாலையின் வழியாகவே இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் இவ்வழியாக பொதுமக்கள் வரும் நேரத்தில் இந்த குறிப்பிட்ட இடத்தில் போதிய தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இருளில் கிணறு இருப்பது தெரியாமல் கிணற்றிற்குள் தவறி விழும் நிலை உள்ளதாகவும் தெரிகிறது.

இதுவரை ஏராளமான முதியவர்கள் இந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து பலத்த காயமுற்றதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே இது தொடர்பாக சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாழடைந்த கிணற்றை மூட வேண்டும். இல்லையேல் பாதப்பு ஏற்படாத வகையில் கிணற்றுக்கு பலமான சுற்றுக்சுவர் அமைக்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றால் தினந்தோறும் அச்சத்துடன் அப்பகுதியை கடக்கும் நிலை உள்ளது. ஆழமான கிணறு என்பதுடன் அதற்கு சுற்றுசுவர் இல்லாததால் பலரும் கிணற்றில் தவறி விழுவது தொடர்கிறது. இந்த கிணறு தரைமட்ட அளவில் சாலையோரம் இருப்பதால் வெளியூரில் இருந்து வரும் நபர்கள் கிணற்றில் விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படுவற்கு முன்பு தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: