வடகிழக்கு பருவமழை தொடங்கியது நீர்நிலைகளின் அருகே சிறுவர்களை விளையாட அனுமதிக்க கூடாது

*அடிப்படை வசதிகளை உடனே வழங்க வேண்டும்

*திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், அவர் கூறியதாவது:  சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 9,10 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 7 வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை மண்டல குழுவினர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, பொது சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, மின்சாரத்துறை, கால்நடை மருத்துவர் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பேரிடர் காலங்களில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஆர்ஐக்கள் ஊராட்சி அளவிலான வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி தகவல்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். நாளைக்கு அனைத்து பேரிடர் மண்டல அலுவலர்கள் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். ஆம்பூர் வட்டம் தேவலாபுரம் மற்றும் துத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்தாண்டு கனமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை தீவிரமாக கண்காணித்து தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பழைய கட்டிடங்களின் விவரங்களை தயார் செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பழைய கட்டிடங்களில் யாராவது இருந்தால் மழை காலங்களில் அவர்களை தற்காலிகமா? தங்க வைப்பதற்கு தக்க ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்.தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி, போர்வை ஆகிய அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் அருகே உள்ள ஜேசிபி இயந்திரம், டிராக்டர், கயிறுகள், மரம் அறுக்கும் கருவி போன்றவைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். வேளாண்மைத்துறை விவசாயிகளின் பயிர்சேதம் ஏற்பட்டால் அதன் விவரங்களை உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொது மக்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளையும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கட்டுபாட்டில் உள்ள 248 ஏரிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 12 ஏரிகள் 25 சதவிகிதத்திற்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. அந்த ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை சரிசெய்து 12 ஏரிகளையும் தண்ணீர் நிரம்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கும் மழைநீர் தேங்காதவாறு தீவிரமாக பார்த்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

பொது மக்கள் தங்களின் குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே விளையாட செல்ல அனுமதிக்க வேண்டாம். நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அனைத்து மண்டல அலுவலர்களும் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து சிறப்பாக பேரிடர் காலங்களில் பணியாற்றிட வேண்டும்.  இவ்வாறு, அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராசசேகர்,  வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, செல்வி, பிரேமலதா, இணை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) பச்சையப்பன், உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

100 இடங்களில் எச்சரிக்கை பலகை

திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி கூறுகையில், ‘நெடுஞ்சாலைத்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உள்ளனர். அதற்கு அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைப்பாலம், மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலை சொந்தமான இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜவ்வாது மலை, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்படும். அதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்டத்தில் 100 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்படும் பகுதிகளில் கவனமாக செல்ல வேண்டும்’ என கூறினார்.

கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்கள் கலெக்டர் வெளியிட்டார். அதில், வடகிழக்கு பருவமழையால் வெள்ள சேதங்கள் குறித்து உடனடி தகவல் பொதுமக்கள் அளிக்க வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு எண்கள் 04179-222111, 229008 என்ற எண்களுக்கும், மாவட்ட காவலர் அறை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள் 04179-221104, 221103, 221102. என்ற எண்களுக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: