மழைக்காலங்களில் பருத்தியை பாதுகாக்கும் வழிமுறைகள்

* வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு

* கடமலை மயிலை விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை ஆளந்தளீர், சிறப்பாறை, உப்புத்துறை, குமணன் தொழு பொன்னன்படுகை, கண்டமனூர், எட்டப்ப ராஜபுரம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.மழைக்காலங்களில் பருத்தியை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து கடமலைக்குண்டு வேளாண்மை உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: செடி வாடல் நோய்க்கு ஒரு லிட்டர் நீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து வேறு நனையும் வகையில் ஊற்ற வேண்டும். பூ, சப்பை உதிராமல் இருக்க லிட்டர் நீரில் 4 கிராம் பிளோனோ பிக்ஸ் கலந்து தெளிக்க வேண்டும். மழைப்பாதிப்பில் இருந்து செடி வளர்ச்சியை மீட்க 19; 19; 19 நீரில் கரையும் உரத்தை இலை வழியாக ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும். காய் அழுகல் நோய்க்கு எக்டேருக்கு 500 கிராம் கார்பண்டசிம் அல்லது 2 கிலோ மேங்கோ சப் மருந்தை வாங்கி தெளிக்கலாம். இலைப்புள்ளி, தயிர் புள்ளி நோயை தடுக்க ஒரு லிட்டர் நீரில் அரை கிராம் 0.5 ட்ரை பிளாக்சிஸ் ரோபின் 50 டபில்யு பி அல்லது டெபுகோனசோல் 25 டபில்யுபி மருந்தை கலந்து 60,90, 120 நாட்களில் தெளிக்க வேண்டும்.

அதுபோல், பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக உள்ளது. பருத்தி சாகுபடி செய்துள்ள உழவர்களின் தங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகள் தத்துப்பூச்சிகள் இலையில் சாற்றை உறிஞ்சும். இலையில் அதனால் சுருக்கங்கள், மேடுபள்ளங்கள் காணப்படும். மஞ்சள் நிறம் இலையின் ஓரங்களில் இருந்து பரவும். கருகலும் ஓரங்களில் இருந்து ஆரம்பித்து பரவும். தத்துப்பூச்சியால் தாக்கப்பட்ட செடியின் இலைகள் காய்ந்து விழுவதால், செடியின் வளர்ச்சி தடுக்கப்படும். பருத்தி தத்துப்பூச்சியினால் பாதிக்கப்பட்டால், ஏக்கருக்கு 40 கிராம் தயாமீதாக்சம் அல்லது இமிடாகுளோபிரிட் ஏக்கருக்கு 40 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் செடிகள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம். மருந்துக் கரைசலைத் தெளிக்கும்போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், இன்ட்ரான்-வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். விவசாயிகள் இதை கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.

பருத்தி சாகுபடி செய்துள்ள கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாய நிலங்களுக்கும் சென்று வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: