*இன்றும் போட்டிகள் நடக்கிறது
நெல்லை : மாநில அளவிலான கலைத்திறன் விழா மாவட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த 2ம்நாள் நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் திரண்டனர். இன்று பிளஸ்1, 2 மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக கலைப்போட்டி திருவிழாவை அறிவித்து நடத்தி வருகிறது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து மாநில போட்டிக்கு தகுதி பெறும் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கின. முதல் நாள் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 2ம் நாளான நேற்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாளையங்கோட்டை சாராள்தக்கர் மேல்நிலைப் பள்ளியில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு குழு நடனம், இசை கருவிகள் இசைத்தல், காய்கனிகளில் கலைப்பொருள், மணல் சிற்பம், தனி நடனம் உள்ளிட்டப் பல்வேறு விதமான தலைப்புகளில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி அமைப்பாளர்களாக மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகசாமி, ஆசிரியர்கள் கணேஷ்சபரி, ராதா ஆகியோர் செயல்பட்டனர். நாட்டுப்புற நடனப்போட்டிகளை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 4 பேர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து இன்று (9ம்தேதி) 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துராஜா பள்ளியில் வைத்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில போட்டியில் பங்கேற்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி உத்தரவுப்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.