கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் இருந்து கடத்தல் வீடுகளின் முன்பு விற்பனைக்கு குவித்து வைத்திருந்த 50 யூனிட் மணல் பறிமுதல்

*அதிகாரிகள் ஆய்வு செய்து அதிரடி

ஆரணி : கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் இருந்து கடத்தப்பட்ட மணலை விற்பனைக்காக வீடுகள் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் கடந்த சில நாட்களாக மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. மணல் கடத்தும் மாபியா கும்பல்கள் பகல் நேரத்தில் ஆற்றுப்பகுதிகளில் தனித்தனியாக குழுக்கள் அமைத்து, ஆற்றில் மணல் சலித்து குவியல் குவியலாக சேகரித்து வைக்கின்றனர்.

இதையடுத்து, ஆற்றுப் பகுதியில் உள்ள ஏரி, முள்புதர்கள், விவசாய நிலங்கள், மணல் மாபியாக்களுக்கு சொந்தமான இடங்களுக்கு மணலை கொண்டுவந்து குவித்து  வைக்கின்றனர். அதனை தொடர்ந்து, இரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை டிப்பர் லாரிகள், டிராக்டர், மாட்டுவண்டிகளிலும் மற்றும் பைக்குகளிலும் மூட்டைக்கட்டியும் மணல் கடத்தல் நடக்கிறது.

அதேபோல், ஆறுகளில் மணல் கடத்தலுக்கு பட்டப்பகலில் ஜேசிபியை பயன்படுத்தி மணல் அள்ளுவது தொடர் கதையாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆரணி அடுத்த தச்சூர், மோட்டூர், விண்ணமங்கலம், எஸ்வி.நகரம், மாமண்டூர், குண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் படுஜோராக நடக்கிறது.

இந்நிலையில், ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள  செய்யாற்றுப் படுக்கையில் மணல் கடத்தி வந்து, தச்சூர் காலனியில் இருந்து ஆற்றுக்கு செல்லும் சாலைகள், அங்குள்ள தெருக்களில் உள்ள வீடுகளின் முன்பு, விவசாய நிலங்களில், குவியல், குவியலாக மணல் சேகரித்து வைத்து, அவற்றை இரவில் டிராக்டர், லாரிகளில் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மாபியாக்களுக்கு விற்பனை செய்து வருவதாக நேற்றுமுன்தினம்  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீசன், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் ராஜகணபதி, ஆர்ஐ நித்தியா, விஏஓ அப்சர் மற்றும் தாலுகா போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, தச்சூர் காலனியில் உள்ள தெருக்களில் பல்வேறு வீடுகள் முன்பு நூதன முறையில் மணல் கடத்தி வந்து, குவித்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, மணலை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் தச்சூரில் பல்வேறு பகுதிகளில் மணல் குவியல்களை பறிமுதல் செய்யும் பணி நடைபெற்றது. இதன்மூலம் 50 யூனிட் மணல் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். பறிமுதல் செய்த மணல் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நீர்நிலைகளை பகுதிகளில் அதிகாரிகள் நேற்று  பார்வையிட்டனர். அப்போது, தச்சூரில் மணல் கடத்தலை தடுக்க ஜேசிபி மூலம் ஆற்றுப் பகுதியில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டும், ஆற்றில் குவியல் குவியலாகவும் சேகரித்து வைத்திருந்த மணலை சமன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, தாசில்தார் ஜெகதீசன் கூறுகையில், ‘மணல் கடத்தல் செயல் சட்ட விரோத செயல், அதனால், மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவழக்குகள் பதிந்து நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, மணல்கடத்தும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்  தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்’ என்று எச்சரித்தார்.

Related Stories: