குமரி, தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்: அலைகள் இன்றி காட்சியளிக்கும் கடலை கண்டு மக்கள் திகைப்பு

கன்னியாகுமரி: சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் பரப்பு 10 அடிவரை உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிகின்றன. அலையின்றி குளம் போல காட்சியளிக்கும் கடல் பரப்பை மக்கள் திகைப்புடன் பார்த்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் வலுவிழந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியிலும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் திடீரென கடல் 10 அடி தூரத்திற்கு உள்வாங்கி உள்ளது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளன.

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காலை முதலே சாரல் மழையும் பெய்து வருவதால் குமாரி சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா தலங்கள் கலையிழந்து காணப்படுகின்றன. கடல் உள்வாங்கி காட்சியளிப்பது சுற்றுலா பயணிகளிடையே வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சிலர் ஆபத்தை உணராமல் வலுக்கும் தன்மை கொண்ட பாறையின் மீது ஏறி செல்பி எடுத்து வருகின்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றுவதோடு தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.          

இதேபோல, மாண்டஸ் புயல் தாக்கத்தால் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் கடல் உள்வாங்கியுள்ளது. 30 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் பகுதியில் 60 முதல் 80கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள இனிகோ நகர் பகுதியில் இன்று காலை கடல் 30 அடிக்கு உள்வாங்கி உள்ளது. இதன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள் தரைத்தட்டி நின்று கொண்டிருந்தது. வழக்கமாக அம்மாவாசை, பௌவுர்ணமி தினங்களில் கடலில் சில மாற்றங்கள் ஏற்பாடும். இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக 30 அடிக்கு கடல் உள்வாங்கியது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: