முதல்வருக்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள், கிராம மக்கள் சால்வை அணிவித்து பாராட்டு

தென்காசி: அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம் கேட்டு முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய தென்காசி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள வினைதீர்த்த நாடார்பட்டி கிராமத்தில் வசிக்கும் 3-ம் வகுப்பு மாணவி ஆராதனா ஒரே நாளில் பிரபலமாகி விட்டார்.

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி ஆராதனா பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று தமக்கு கடிதம் எழுதியதை குறிப்பிட்டார். அந்த மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர் ரூ.35 லட்சம் செலவில் கட்டடம் கட்டித்தரப்படும் என்று விழா மேடையிலேயே உறுதியளித்தார். இதற்கு மாணவி ஆராதனா மற்றும் மாணவியின் தந்தை தங்கராஜ் நன்றி தெரிவித்து கொண்டனர்.

பள்ளியில் கூடுதல் கட்டடம் கேட்டு நீண்டகாலம் போராடிய வினைதீர்த்த நாடார்பட்டி கிராம மக்களுக்கு தங்கள் கிராமத்து மாணவி ஒரு கடிதம் மூலம் சாதித்து காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. மாணவி ஆராதனாவை பள்ளிக்கு தேடி சென்று கிராம மக்கள் பாராட்டினர். மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். முதலமைச்சர் அறிவிப்பால் வினைதீர்த்த நாடார்பட்டி கிராம மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.    

Related Stories: