ஆம் ஆத்மியால் வென்றது பா.ஜ; வீழ்ந்தது காங்.

குஜராத், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சொந்த மாநிலம் என்பதால், இந்த தேர்தல் அவர்களின் இருவருக்கும் கவுரவ பிரச்னையாக பார்க்கப்பட்டது. ‘மோடி’ என்ற ஒரே பிம்பத்தை வைத்து குஜராத்தில் பாஜ வெற்றி பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறை பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி ஏற்பட்டதால், பாஜ வெற்றி பெறுவது கடினம் என உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்தது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சுற்றி சுற்றி வந்து ஓட்டு கேட்டனர். 50 கி.மீ. மெகா ரோடு ஷோ, வாக்குப்பதிவு நாளான்று விதியை மீறி சுமார் 2.30 மணி நேரம் ரோடு ஷோ என்று மோடியை முன்வைத்தே வாக்கு சேகரிப்பு நடந்தது. கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடுகளை குஜராத்துக்கு ஒன்றிய பாஜ அரசு கொண்டு சென்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில், பாஜ மெகா வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைக்கும் என கூறப்பட்டது. அதன்படி, 7வது முறையாக ஆட்சியை பிடித்து பாஜ சாதனை படைத்துள்ளது. 2002ம் ஆண்டு நடந்த தேர்தல் 127 இடங்களை பாஜ கைப்பற்றி இருந்தது. தற்போது 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ கைப்பற்றி உள்ளது. இதன்மூலம், 1985ல் மாதவ்சிங் சோலங்கியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வென்ற 149 இடங்கள் என்ற சாதனையை முறியடித்து வரலாறு படைத்து உள்ளது.

ஆம் ஆத்மி வாக்குகளை பிரித்ததால், கடந்த முறை வென்ற 77 தொகுதிகளை கூட இந்த முறை காங்கிரஸ் பெறவில்லை. 20க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றி உள்ளது. மேலும், பல தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்தது, ஓவைசி கட்சியான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், இஸ்லாமியர்கள் வாக்குகளை பல தொகுதிகளில் மொத்தமாக அள்ளியது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.  இது பாஜவுக்கு சாதகமாக அலை வீச காரணமாகிவிட்டது. பட்டிதார் சமூகத்தின் வாக்குகள்தான் குஜராத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும்.

இதனால், காங்கிரசில் இருந்த ஹர்திக் படேலை தேர்தலுக்கு முன்பு, ஆபரேஷன் தாமரை மூலம் தங்கள் கட்சிக்குள் இழுத்து போட்டது பாஜ. இந்த சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேலை, மீண்டும் குஜராத் முதல்வராக முன் நிறுத்தியது. இதுபோன்ற காரணங்களால் பாஜ இந்த முறை இமாலய வெற்றியை பெற்றுள்ளது. பாஜவுக்கு ஒரு பயத்தை காட்டி, ‘மாற்று நாங்கள்தான்’ என்ற கோஷத்துடன் களமிறங்கிய ஆம் ஆத்மி ஒற்றை இலக்கை கூட தாண்டவில்லை. ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் மான், டெல்லி துணை முதல்வர் சிசோடியா என்ற அக்கட்சியின் தலைவர்கள் பட்டாளமே குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. இவர்களின் பிரசாரம் அக்கட்சி உதவாமல், பாஜவுக்கே சாதகமாக அமைந்துவிட்டது. இந்த போட்டியில் காங்கிரஸ் புஸ்வாணமாக பொசுங்கி விட்டது.

ஒட்டுமொத்தமாக பாஜ 52.55% வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 27.25 சதவீதமும், ஆம் ஆத்மி 12.89% சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 49.05 சதவீதமும், காங்கிரஸ் 41.44 சதவீதமும் வாக்குகளை பெற்றன. ஆம் ஆத்மி 0.1% வாக்குகள் மட்டுமே பெற்றது. 2002ம் ஆண்டு முதல் இந்த தேர்தல் வரை பாஜ சரிவை மட்டுமே கண்டது. காங்கிரஸ் ஏற்றத்தில் இருந்தது. 2002ம் ஆண்டில் 127 இடங்களை பிடித்த பாஜ, 2017ல் 99 இடங்களாக குறைந்தது. 2002ல் 51 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், 2017ல் 77 ஆக உயர்ந்தது. 24 ஆண்டு பாஜ ஆட்சி மீது கடும் அதிருப்தியில் இருந்த மக்களால், இந்த முறை பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த முறை காங்கிரஸ் எடுத்த வாக்கு வங்கியில் இருந்து 14.19% வாக்குகளை ஆம் ஆத்மி மற்றும் பாஜ தட்டி பறித்தது. இதில், 12.89% வாக்குகளை மட்டும் ஆம் ஆத்மி எடுத்து உள்ளது.

1985க்கு பிறகு இமாலய வெற்றியை பாஜ பதிவு செய்து உள்ளது. மோடி முதல்வராக இருந்தபோது கூட இந்த அளவுக்கு வெற்றியை அவர்கள் பெறவில்லை. 2001 முதல் 2014ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது கூட பாஜ இந்த வெற்றியை பார்க்கவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலும் பாஜ சரிவை மட்டுமே சந்தித்தது. குஜராத்தில் மொத்தமே 66.31%  வாக்குகள் பதிவாகி இருந்தன. இதுவும் பாஜவுக்கு சாதகமாகிவிட்டது. அதிக சதவீத  வாக்குகள் பதிவாகி இருந்தால், எதிர்பாராத முடிவுகள் வந்திருக்கும். பாஜ வரலாற்று வெற்றியை பெற்றதற்கு காரணம் மோடிதான் என்று பாஜ தலைவர்கள் கூறினாலும், ஆம் ஆத்மி வாக்குகளை பிரித்ததாலே பாஜ அமோக வெற்றி பெற்றது என்பது நிதர்சன உண்மை. இந்த மிகப்பெரிய வெற்றியை பாஜ தலைவர்களே எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

2002ம் ஆண்டு முதல்

பாஜ, காங்கிரஸ்

கைப்பற்றிய தொகுதிகள்

ஆண்டு    பாஜ    காங்.

2002    127    51

2007    117    59

2012    115    61

2017    99    77

2022    156    17

* குஜராத் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்: மோடி

நன்றி குஜராத். இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப்பார்த்து மிகுந்த உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். வளர்ச்சிக்கான அரசியலுக்கு மக்கள் ஆசி அளித்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். குஜராத்தின் மக்கள் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, குஜராத் பாஜ மீது அன்பைப் பொழிந்து வரலாறு படைத்துள்ளது. மக்கள் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவிப்பது, வாரிசு அரசியல், ஊழலுக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்து வருவதை காட்டுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளையும் விரைவாக எடுத்துச் சென்றதால் மக்கள் பாஜவுக்கு வாக்களித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் வாக்காளர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். வெற்றி பெற்ற கட்சியை விட எங்கள் வாக்குகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதம் மகத்தானது.

* குஜராத்தில் தொடர்ந்து போராடுவோம்; ராகுல்

உங்கள் அனைவராலும் இந்த வெற்றி வந்தது. நன்றி இமாச்சலபிரதேசம். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இமாச்சல் மக்களுக்கு இதயத்தின் அடிஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கும் இதயம்கனிந்த நன்றி. இந்த வெற்றிக்குப்பின்னால் உங்களது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மிகவிரைவில் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். குஜராத் தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து, கடின உழைப்புடன் நாட்டின் கொள்கைகளுக்காகவும், குஜராத் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடுவோம்.

* அடுத்த முறை நாங்கள் தான்: கெஜ்ரிவால்    

தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற உதவிய குஜராத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் குறைவான கட்சிகள்தான் தேசிய அந்தஸ்தை அடைந்துள்ளன. இப்போது நாங்களும் அவர்களில் ஒருவராக இருக்கிறோம். எங்களுடையது 10 வருடக் கட்சி. குஜராத் பாஜவின் ‘‘கோட்டை” என்று கருதப்படுகிறது. அங்கு கூட மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு  உதவியுள்ளனர். அடுத்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

* இமாச்சல் முதல்வர் பதவிக்கு பிரதீபா உள்பட 3 பேர் போட்டி

இமாச்சலபிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது. அங்கு முதல்வர் பதவிக்கு 3 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் வீர்பத்திரசிங் மனைவியுமான பிரதீபாசிங் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் மாநில தலைவர் சுக்வீந்தர்சிங் சுகு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிகோத்ரி ஆகியோர் களத்தில் உள்ளனர். அதே போல் பிரதீபா சிங் மகனும் சிம்லா புறநகர் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற விக்ரமாதித்யாவை முதல்வராக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

* மாறி மாறி ஆட்சி

1985க்குப் பிறகு இமாச்சலப் பிரதேசத்தில் எந்த ஒரு ஆளும் கட்சியும் அடுத்தடுத்துத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை உட்பட பல்வேறு விவகாரங்களில் பாஜ மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. இவை அனைத்தும், இமாச்சலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்த்தனர். அதன்படியே, இமாச்சலில் பாஜ ஆட்சியை இழந்துள்ளது. காலை முதல் மதியம் வரை மாறி மாறி காங்கிரஸ், பாஜ முன்னிலை பெற்றது. இறுதியில், காங்கிரஸ் பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த காங்கிரஸ், இமாச்சலில் முன்னிலை என்ற செய்தி அக்கட்சிக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. ராகுலின் நடைபயணம், புதிய தலைவர் என காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில் இந்த முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசுக்கு புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம், இமாச்சலில் 1985க்கு பிறகு ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்ததில்லை என்ற சோதனை வரலாறு தொடர்கிறது.

* 3வது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்தபோது, காங்கிரஸ் 14 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் பாஜ ஆட்சியை பிடித்தது. தற்போதைய நிலவரப்படி பாஜ மற்றும் கூட்டணி கட்சி ஆட்சி 19 மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில், 11 மாநிலங்களில் எம்எல்ஏக்களை இழுத்து, ஆட்சியை கவிழ்த்து பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தற்போது இமாச்சலில் காங்கிரஸ்  ஆட்சியை பிடித்து உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

* 37 ஆண்டு ஒற்றுமை

குஜராத் மற்றும் இமாச்சலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் குஜராத்தில் சுமார் 37 ஆண்டுகளுக்கு பின், இதுவரை இல்லாத அளவுக்கு 150க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜ வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், இமாச்சலில் 37 ஆண்டு வரலாற்றை பாஜவால் உடைக்க முடியவில்லை. இமாச்சலில் கடந்த 37 ஆண்டுகளாக எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடிக்கவில்லை. இந்த வரலாறு இந்த தேர்தலிலும் தொடர்கிறது.

* ஆம் ஆத்மி முட்டை

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் மட்டுமே கட்சியை வளர்த்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மையுடன் ஆட்சி கைப்பற்றி ஆம் ஆத்மி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் கால் பதிக்க திட்டமிட்டு ஆம் ஆத்மி கட்சியை கெஜ்ரிவால் வளர்த்து வருகிறார். பாஜ கோட்டையான குஜராத்தில் இந்த முறை களம் கண்டு, அக்கட்சியையே ஆட்டம் காண வைத்தார் கெஜ்ரிவால். இதனால், மோடி தலைமையில் பெரும் படையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. இதற்கு பலன் பாஜவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த மாநிலத்தில் ஒற்றை இலக்கை கூட ஆம் ஆத்மி தாண்டவில்லை. இதேபோல், இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி முன்னிலை பெறவில்லை.

* பிரியங்கா பிரசாரத்தால் இமாச்சலில் வெற்றி

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடா யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, 7 மாநிலங்களை கடந்து, தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் மற்றும் குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி, வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர் பங்கேற்கவில்லை. இமாச்சல் தேர்தல் பிரசாரத்திற்கு கூட அவர் செல்லவில்லை. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மட்டுமே பிரசாரம் செய்தனர். ராகுல் பிரசாரத்துக்கு செல்லாமலே இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* நட்டா சொந்த மாநிலத்தில் கோட்டை விட்ட பாஜ

பாஜ தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி.நட்டா. இவரது சொந்த மாநிலம் இமாச்சல் பிரதேசம். குஜராத் சொந்த மாநிலம் என்பதால், அங்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா, ஜே.பி.நட்டா சொந்த மாநிலத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இங்கு ஆளும் பாஜ மீது அதிருப்தியால், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து உள்ளது. குஜராத்தில் இமாலய வெற்றி என்று கூறி வரும் பாஜ, அக்கட்சியின் தேசிய தலைவரின் சொந்த மாநிலத்திலேயே கோட்டைவிட்டுள்ளது.

* ‘குஜராத் வெற்றிக்கு மகாராஷ்டிரா உதவியது’

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘குஜராத்தில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த நிலையில் இருந்தது. மோடியின் தலைமையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அதனால்தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். குஜராத்தில்  வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு பாஜ மற்றும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு கொண்டு செல்லப்பட்ட திட்டங்களும் வெற்றிக்கு உதவியது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: