திருவாரூர் அருகே பயங்கரம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் வெட்டிக்கொலை: வாலிபர் அதிரடி கைது

வலங்கைமான்: திருவாரூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் சரமாரி வெட்டி கொலைசெய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வேப்பத்தாங்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). அதிமுகவை சேர்ந்த இவர், அரவூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது அண்ணன் மகன் சத்தியமூர்த்தி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அந்த பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள், இருவரையும் வரவழைத்து பேசி பிரித்து வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பன்னீர்செல்வத்துக்கும், அந்த பெண்ணின் சகோதரர் விஜய்க்கும் (23) முன்விரோதம் இருந்து வந்தது. தங்கையின் காதலனை பிரித்து வாழவிடாமல் செய்ததோடு, ஊர்முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியதால் அவரை தீர்த்துக்கட்ட விஜய் முடிவு செய்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நீடாமங்கலம் மெயின் ரோடு, கொட்டையூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் நின்றிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த விஜய், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் பன்னீர்செல்வம் தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்பலனின்றி நேற்று காலை பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிந்து விஜய்யை கைது செய்தனர். பன்னீர்செல்வத்துக்கு மனோன்மணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: