50 வீடுகள் சேதம்: 2 உயிர்களை பலி வாங்கிய அரிசி ராஜா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும், இரண்டு பெண்களை மிதித்தும் கொன்ற அரிசி ராஜா என்ற மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நேற்று பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்ட பகுதிகளான வாழவயல், தேவாலா அட்டி, பொன்னூர், நாடுகாணி, முண்ட குன்னு, புளியம்பாறை, பாடந்துறை, சுண்டவயல், மூச்சுக்கண்டி, வேடன்வயல், கோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக சுற்றித் திரிந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, அரிசி உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டு வந்த அரிசி ராஜா யானை, சமீபத்தில் தேவாலா வாழவயல் மற்றும் புளியம்பாறை பகுதிகளில் இரு பெண்களை மிதித்து கொன்றது.  

கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கான உத்தரவை தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சீனிவாச ரெட்டி பிறப்பித்தார். அதன்பின், நீலகிரி மாவட்ட மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில் யானையை கண்காணிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் புளியம்பாறை அடுத்த நீடில் ராக் காப்பிகாடு பகுதியில் மரத்தின் மீது அமைக்கப்பட்ட பரண் ஒன்றின் மீது அமர்ந்திருந்தனர். நேற்று பிற்பகல் 1 மணி அளவில் அந்த வழியாக வந்த அரிசி ராஜா யானைக்கு

கால்நடை மருத்துவர்கள் சுகுமாறன், மனோகரன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் கால்நடை மருத்துவர்கள் ராஜேஸ்குமார், விஜயராகவன் ஆகியோர் மரத்தின் மீது கட்டப்பட்ட பரணில் இருந்து இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்திய பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வரை சென்ற யானை அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தலைமை பாகன் மாறன் தலைமையில் அதன் கால்களில் கயிறு கட்டி கும்கி யானைகள் சூழ்ந்து நிறுத்தப்பட்டன.  இதனை தொடர்ந்து, யானையை லாரியில் ஏற்றி முதுமலை வனப்பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

* மீண்டும் திரும்பிய அரிசி ராஜா

கடந்த 2020ம் ஆண்டிலேயே அரிசி ராஜாவின் அட்டகாசம் அதிகளவில் கேரள மாநில வனப்பகுதி வரை கொண்டு சென்று துரத்திய பின்னர் 3 மாத காலத்திற்கு மீண்டும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருந்தது. அதன்பின் மீண்டும் தொழிலாளர்கள் குடியிருப்பை குறி வைத்து தாக்குதலை நடத்த துவங்கியது.

* கும்கியாக மாற்ற கோரிக்கை

ஏற்கனவே அரிசி ராஜாவை கேரள வனப்பகுதி வரை கொண்டு விட்ட போதும் மீண்டும் மக்கள் வசிப்பிடங்களுக்கு வந்து தொந்தரவு அளித்தது. எனவே, இதனை மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடாமல் கும்கியாக மாற்ற வேண்டும் என யானையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: