கைலாசநாதர் கோயிலில் உரிமை கொண்டாடும் ஓபிஎஸ் குடும்பம்: தேனி கலெக்டர், எஸ்பியிடம் எம்எல்ஏ புகார்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலையின் மேல் கைலாசநாதர் கோயில் காலங்காலமாக கைலாசபட்டியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்  கோயிலை பராமரித்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் மூலமாக தன்னார்வக்குழு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ் குடும்பத்தினரே இக்கோயில் விழாக்களில் முன்னுரிமை பெற்று வருகின்றனர். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை வசமானது. கடந்த 6ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவில், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அரசு முறைப்படி மரியாதை செலுத்தப்பட வேண்டிய எம்எல்ஏ சரவணக்குமாருக்கு பரிவட்டம் கட்டாமல், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பிற்கு திருப்பரங்குன்றத்தில்  இருந்து வந்திருந்த குருக்கள் பரிவட்டம் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வனுடன் சென்று, கலெக்டர் முரளீதரன், எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் நேற்று புகார் மனு அளித்தார். மனுவில், ‘கைலாசநாதர் கோயிலானது தொட்டியநாயக்கர் சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டது. இக்கோயிலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சொந்தமானது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி கடந்த பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர். இக்கோயிலின் பூசாரியாக இருந்த நாகமுத்து தற்கொலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு தொடர்பிருப்பதாக வழக்கு நிலுவையில் உள்ளது. ஓபிஎஸ் மகன் உள்ளிட்ட தன்னார்வ குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.

Related Stories: