தூய்மைப்பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் துவக்கி வைக்கிறார்: அம்பேத்கர் வெண்கல உருவச்சிலையையும் திறந்து வைக்கிறார்

மதுரை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள தூய்மைப்பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். அவனியாபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் வெண்கல உருவச்சிலையையும் திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கார் மூலம் நேற்றுமாலை மதுரை வந்தார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் அவருக்கு மேள, தாளம் முழங்க  மாவட்டச் செயலாளர்களான அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் துவக்கி வைக்கிறார்.

அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக, ஆரப்பாளையத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் வீடுகளில், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதையும், அவர்கள் குறித்து விபரங்களை சேகரிக்கும் களப்பணிக்குழுவினர்களின் பணிகளையும் பார்வையிடுகிறார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கான புதிய செயலியையும் துவக்கி வைக்கிறார்.

பின்னர் அவனியாபுரம் பகுதி, பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனத்தலைவரும், எம்.பி.யுமான தொல் திருமாவளவன் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

Related Stories: