நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூரில் நூற்றாண்டு பழமையான கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தை மீட்டால், கோயிலின் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டு கோயிலின் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், சம்பந்தப்பட்டவர்கள், ஐகோர்ட் கிளையை நாடி உரிய தீர்வு காணலாம் என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், தங்களின் கருத்துக்களை அறியாமல் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதாகக் கூறி 39 பேர் மனு செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலின் நிலத்தில் தற்போது இருப்பவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். அவர்கள் தரப்பில் விளக்கமளிக்க வாய்ப்பளித்து, அதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், ஆக்கிரமிப்பை அகற்ற 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 2018 முதல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் அலட்சிய போக்குடன் நடந்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: