கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 14 கி.மீ. தூரம் அண்ணாமலையார் கிரிவலம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. இதன் நிறைவாக, கடந்த 6ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத பரம்பொருள், ஜோதிப்பிழம்பாக எழுந்தருளியதை சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகாதீபத்தின் 2ம் நாளன்று இறைவனே கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி கிரிவலம் சென்றார்.

பஞ்சமூர்த்திகளில் ஒருவரான பராசக்தி அம்மனும், எல்லை காவல் தெய்வமான துர்க்கையம்மனும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்தனர். இந்த ஆண்டில் 2வது முறைாக அண்ணாமலையார் கிரிவலம் சென்றதால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழிநெடுக பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய அண்ணாமலையார் கிரிவலம், மாலை 4 மணியளவில் கோயிலில் நிறைவடைந்தது. கிரிவலம் முடிந்து கோயிலுக்கு திரும்பிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

* ஆண்டுக்கு இரண்டு முறை மலையை வலம் வரும் சுவாமி

மலையே வடிவாகவும் லிங்கமே உருவமாகவும் காட்சியளிக்கும் அண்ணாமலையை, ஆண்டுக்கு இரண்டு முறை சுவாமியே (அண்ணாமலையார்) வலம் வந்து வழிபடுகிறார். ஆண்டுதோறும் தை 5ம் நாள் திருவூடல் முடிந்ததும் சுவாமி கிரிவலம் செல்வார். அதைத்தொடர்ந்து, கார்த்திகை மாதம் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றிய 2ம் நாளன்று சுவாமி கிரிவலம் செல்வார். வருடத்தில் 2 முறை கிரிவலம் செல்லும்போது, திரளான பக்தர்கள் தரிசிப்பார்கள்.

Related Stories: