×

156 தொகுதிகளில் அமோகம் குஜராத்தில் பாஜ வரலாற்று வெற்றி: 7வது முறையாக ஆட்சி அமைக்கிறது; இமாச்சலை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: குஜாரத்தில் 156 தொகுதிகளில் கைப்பற்றி, பாஜ வரலாற்று வெற்றியை பெற்று 7வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இமாச்சலில் காங்கிரஸ் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. குஜராத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியிலும், இமாச்சல் ஜனவரியிலும் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால், 68 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல் பிரதேசத்திற்கு கடந்த நவ. 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 76.44% வாக்குகள் பதிவானது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் 66.31% வாக்குகள் பதிவாகி இருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், குஜராத்தில் பாஜ 160 இடங்கள் வரை வென்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதனை படைக்கும் என  கூறப்பட்டிருந்தது. இமாச்சலில் பாஜ ஆட்சியை இழக்கும் என்றும், இழுபறி  நீடிக்கும் என்றும் பல கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இரு மாநில தேர்தல் முடிவுகளை அறிய நாடே ஆவலாக இருந்தது. இந்த  முடிவுகள் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல்  கட்சிகள் முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இமாச்சலில் 59 மையங்களிலும், குஜராத்தில் 37 மையங்களிலும் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. குஜராத்தில் தொடக்கம் முதலே பாஜ ஆதிக்கம் செலுத்தியது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜ 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  ஆம் ஆத்மி 5 தொகுதிகளை கைப்பற்றியது. சமாஜ்வாடி ஒரு இடத்திலும், மற்றவை 3 இடங்களிலும் வென்றது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் 1,92,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்று, குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக வரும் 12ம் தேதி பதவியேற்க உள்ளார்.

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து தங்கள் கட்சிக்கு இழுத்து விராம்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஹர்திக் பட்டேலுக்கு பாஜ வாய்ப்பு அளித்தது. இவர், 51,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். வட்கம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி 4,928 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட இசுதன் காத்வி, பாஜ வேட்பாளர் அயர் முலுபாய் ஹர்தாஸ்பாய் பேராவிடம் 18,745 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 156 தொகுதிகளை பாஜ கைப்பற்றி உள்ளதால், 1985ம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற 147 இடங்களின் சாதனையை முறியடித்து, 37 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று வெற்றியை பெற்று உள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1997ம் ஆண்டு முதல் 2011ம் வரை தொடர்ந்து 7 முறை வென்று 34 ஆண்டுகள் ஆட்சி செய்த சாதனையை பாஜ சமன் செய்துள்ளது. 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் இருந்தே பாஜ முன்னிலை பெற்றது. ஒரு மணி நேரத்துக்கு பின் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இரு கட்சிகளும் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாறி மாறி முன்னிலை பெற்றனர். மதியத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

இறுதியில் 40 தொகுதிகளில் காங்கிரசும், பாஜ 25 தொகுதிகளிலும், மற்றவை மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜ ஆட்சியை இழந்தாலும், முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் செராஜ் 38,183 வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். இதேபோல்  அமைச்சர்கள் பிக்ரம் சிங் 1,789 வாக்குகள் வித்தியாசத்திலும், சபாநாயகர் விபின் சிங் பர்மர் 7,112 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், முன்னாள் அமைச்சர்களின் மகன்களும் வெற்றி பெற்றுள்ளனர். இமாச்சலப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர், முதல் முறையாக சிம்லா மாவட்டத்தில் உள்ள தியோக் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிட்டு உள்ளார்.

இவர், 5,269 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று பெற்றார். இவர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான், கடந்த ஆண்டு மண்டி மக்களவைத் தொகுதிக்கும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. சுயேச்சையாக போட்டியிட்ட ஹோஷியார் சிங்கும், கே.எல்.தாக்கூரும் வெற்றி பெற்றுள்ளனர். அதேநேரத்தில் 67 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதிகளிலும் கூட முன்னிலை பெறவில்லை. குஜாரத்தில் பாஜ வரலாற்று வெற்றி பெற்றதாலும், இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததாலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

குஜராத்
தொகுதிகள்    182
பெரும்பான்மை    92
கட்சிகள்    வெற்றி    வாக்கு %
பாஜ    156    52.5%
காங்கிரஸ்    17    27.3%
ஆம் ஆத்மி    5    12.9%
மற்றவை    4    4.34%

குஜராத்தில்
7 தேர்தல்களில் பாஜ
ஆண்டு    தொகுதி
1995    121
1998    117
2002    127
2007    117      
2012    115
2017    99
2022    156

இமாச்சல் பிரதேசம்
தொகுதிகள்    68
பெரும்பான்மை    35
கட்சிகள்    வெற்றி    வாக்கு %
காங்கிரஸ்    40    43.9%
பாஜ    25    43%
ஆம் ஆத்மி    0    1.1%
மற்றவை    3    10.4%

* 8 அமைச்சர்கள் இமாச்சலில் தோல்வி
இமாச்சலில் 8 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஜெய்ராம் தாக்கூர் அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து 12 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 8 பேர் தோல்வியை தழுவி உள்ளனர். அமைச்சர்கள் சுரேஷ் பரத்வாஜ், ராகேஷ் பதானியா, கோவிந்த்சிங் தாக்கூர், ராம்லால்மார்காந்தா, ராஜீந்தர்கார்க், ராஜீவ் செஜால், சர்வீன் சவுத்திரி, வீரேந்தர் கன்வார் ஆகியோரும், அமைச்சர் மகேந்தர்சிங்கிற்கு பதிலாக போட்டியிட்ட மகன் ராஜத் தாக்கூர் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

* இமாச்சல் முதல்வர் ராஜினாமா
இமாச்சலபிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜ தோல்வி அடைந்ததால் ஜெய்ராம் தாக்கூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ தோல்வி அடைந்தது. 40 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவியை ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ரஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் சமர்ப்பித்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

* இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
இமாச்சல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று சிம்லாவில் நடக்கிறது. முன்னதாக அனைத்து எம்எல்ஏக்களையும் சண்டீகர் அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று சிம்லாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மூத்த தலைவர் பூபிந்தர் ஹூடா பங்கேற்கிறார்கள்.

* பிரியங்காவுக்கு வாழ்த்து
இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பிரியங்கா காந்திதான் காரணம் என்று மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இந்த வெற்றி குறித்து பிரியங்கா வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,’ காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றி மக்களின் பிரச்னைகளுக்கு கிடைத்த வெற்றி. முன்னேற்றத்திற்கான அவர்களின் உறுதிப்பாடுக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பு பலனளித்துள்ளது’ என்று தெரிவித்தார். அவரது பிரசாரத்திற்கு இமாச்சலபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

* காங். முதல்வர் வேட்பாளர் தோல்வி
இமாச்சல் பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்தவர் 6 முறை எம்எல்ஏவான ஆஷா குமாரி. இவர் டல்ஹவுசி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் தவிந்தர் சிங் போட்டியிட்டார். இவர், 9918 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனால் ஆஷா குமாரி முதல்வர் கனவு தகர்ந்தது.

* மோர்பியில் பாஜ வெற்றி
குஜராத் பிரபல சுற்றுலாதளமாக விளங்கும் மோர்பி தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் அறுந்து விழுந்தது. இதில் 154 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம், தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ திணறியது. சிட்டிங் பாஜ எம்எல்ஏவுக்கு சீட் கொடுக்காமல், ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றிய காந்திலால் அம்ருதியா என்பவருக்கு பாஜ தலைமை போட்டியிட சீட் கொடுத்தது. அவர் சுமார் 62,079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

* ரவீந்திர ஜடேஜா மனைவி வெற்றி
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா போட்டியிட்டார். இவர் 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் கர்ஷன்பாய் கர்மூரை தோற்கடித்தார். இங்கு, காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.


Tags : BJP ,Gujarat ,Congress ,Himachal , BJP's historic victory in 156 seats overwhelming Gujarat: Forms government for 7th time; Congress won Himachal
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...