புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 79 பேர் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலைக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 79 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் நேற்று முன்தினம் போலீசார் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். 90 வலிநிவாரண மாத்திரைகள் மற்றும் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 76 பேர் கைது செய்யப்பட்டனர். 29 கிலோ, 13 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 2,082 சிகரெட் மற்றும் பணம் ரூ.980 பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 403 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. 10 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 4 குற்றவாளியிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செப். 17ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை 560 கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: