மருத்துவக் கல்லூரி முன்னாள் இயக்குனரிடம் செயின் பறிப்பு; ஊட்டியில் பதுங்கிய கொள்ளையனை தனிப்படை போலீஸ் சுற்றிவளைப்பு

வேளச்சேரி: சென்னை அடையாறு, காந்தி நகர், 2வது கிரசன்ட் அவென்யூவை சேர்ந்தவர் மஞ்சுளா (68), சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த நவம்பர் 24ம் தேதி இரவு காந்திநகரில் உள்ள காய்கறி கடைக்கு சென்று விட்டு வெளியே வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் திடீரென மஞ்சுளா அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுதொடர்பாக, அவர் கொடுத்த புகாரின்படி, அடையாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் பழைய குற்றவாளிகளான சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த விஜய் (24) மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த யுவராஜ் (28) ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 1ம் தேதி விஜய்யை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த யுவராஜை தேடி வந்தனர். இந்நிலையில் யுவராஜ் ஊட்டியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தனிப்படை போலீசார் ஊட்டிக்கு சென்று நேற்று முன்தினம் இரவு யுவராஜ கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது லட்சுமியிடம் பறித்த 7 சவரன் தாலி செயினை ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பதாகவும், நுங்கம்பாக்கத்தில் இரண்டரை சவரன் தங்க செயினை பறித்ததாகவும், அதை வீட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீசார் வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் ஊத்துக்கோட்டைக்கு அழைத்து சென்று அங்கு அடமானம் வைத்திருந்த 7 சவரன் தாலி செயினை மீட்டனர். நகை அடமானம் வைத்து கிடைத்த பணத்தில் உல்லாசமாக செலவு செய்தது போக மீதி வைத்திருந்த ரொக்க பணம் ₹70,000 மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

Related Stories: