அரசியல் சாசனம் தெரியாத தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்: மக்களவையில் திமுக, கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: தமிழக  கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில், தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட மசோதா மீது நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அனுமதி வழங்கவில்லை என்பதால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்த நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு,``ஆன்லைன் சூதாட்டம் பல குடும்பங்களை கடுமையாக பாதித்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் இதுவரை தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர். இதைத்தடுக்க தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய இந்த விவகாரம் தொடர்பான மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதேபோல் 22 மசோதாக்கள் தமிழக ஆளுநரின் அலமாரியில் முடங்கி கிடக்கிறது. எனவே, அரசியல் சாசனம் தெரியாத அவரை திரும்பப் பெற வேண்டும். இவை அனைத்து குறித்தும் ஆளுநருக்கு எடுத்து கூறியும், கோரிக்கை வைத்தும் அவர் எந்த பதிலும் பேசாமல் இருக்கிறார்.

இது தொடர்பாக மக்களவையில் அமைச்சர்களிடமும் கேள்வி எழுப்பினோம். அரசியல் சாசனம் தெரிந்த மற்றும் அதனை படித்தவரை தமிழகத்தில் ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும். அதனால் தற்போது இருக்கும் தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளது. ஆனால் மக்களின் நலன் கருதி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தடை சட்டத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் உள்ளார். அதே நேரம் ஆன்லைன் கேமிங் நிறுவன நிர்வாகிகளை சந்தித்துள்ளார், அந்த விளையாட்டை திறன் என கூறுகிறார். இதை பார்க்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக ஆளுநரே ஊக்குவிப்பதாக தான் தெரிகிறது,’’ என்று கூறினார்.

Related Stories: