சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி: கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திலும் முக்கிய நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.  தற்போது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சர் அளித்த அறிக்கைகளை பார்த்து வருகிறேன்.

ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடக்கும் தொடர்கதை என்பதை அமைச்சகம் உணர வேண்டும். மேலும் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை தளத்தைக் கடக்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.  இதனால் பல நேரங்களில் பயணிகள் தங்களது விமானங்களை தவறவிடும் சூழலும் ஏற்படுகிறது. இது மிகுந்த கவலையளிக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பு சோதனை தளத்தை விரிவுபடுத்தி இருக்கலாம். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: