ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வேண்டும்: திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது: ஆர்.என். பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.3.1993 சமூக ரீதியாக முன்னேறிய நபர்களை தவிர்ப்பதற்காக கிரீமிலேயர் முறையை கண்டறிந்தது. ஓபிசி இடஒதுக்கீடுகளில் இருந்து கிரீமிலேயர் வகுப்பினரை விலக்குவதற்கான அறிக்கையினை வகைப்படுத்தி அக்குழு சமர்ப்பித்தது. இது செப்டம்பர் 8, 1993ல் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கும் கிரீமிலேயரை விலக்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடக்கத்தில், அதாவது 1993ம் ஆண்டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது உயர்த்தப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 2017ல் ₹6 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக திருத்தப்பட்டது.

இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான உச்சவரம்பு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. பணவீக்கம், பணமதிப்பு, நேர மாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமத்துவம் அடைய முடியவில்லை. ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான ₹8 லட்சம் திருத்துவதற்கான 3 காலம் ஏற்கனவே 1.9.2020ல் முடிந்துவிட்டது. எனவே வருமான உச்சவரம்பை ₹15 லட்சமாக திருத்துவது தற்போதைய தேவையாக உள்ளது. அதே போன்று கிரீமிலேயரை நிர்ணயிக்கும் காரணிகள் திருத்தப்பட வேண்டும். எனவே, ஓபிசி வகுப்பினரின் வருமான உச்சவரம்பை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்,’’ என கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: