நாடாளுமன்ற துளிகள்…

முன்னாள் பிரதமர்,மூத்த எம்பி.க்களுக்கு சலுகை

மாநிலங்களவை துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜகதீப் தன்கரை பாராட்டி உறுப்பினர்கள் நேற்று பேசினர். அதற்கு ஜகதீப் தன்கர் பதிலளிக்கையில்,‘‘ அவையில் பேச பெரிய கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது. முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் தற்போது எம்பி.க்களாக உள்ளனர். எனவே, முன்னாள் பிரதமர்கள், மூத்த எம்பி.க்களுக்கு இனிமேல் சலுகை அளிக்கப்படும்’’ என்றார்.

எம்பி.க்களுக்கு எச்சரிக்கை

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா சிவில் விமான போக்குவரத்து துறை பற்றி பேசினார். இதை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘அவையில் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை என உறுப்பினர்கள் சிலர் டிவிட்டரில் பதிவிடுகின்றனர். சபாநாயகரை பற்றி யாரும் இவ்வாறு பதிவிடக்கூடாது. அது நல்லது அல்ல’’ என்றார்

பிரதமரின் 5 ஆண்டு வெளிநாட்டு பயணச்செலவு ₹239 கோடி

பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவு குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன், ``பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு 3 முறை பிலிப்பைன்ஸ் சென்றதில் தொடங்கி, இதுவரை 36 முறை அதிகாரிகள் குழுவுடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 9 பயணங்களில் சில நாடுகளுக்கு 2வது முறையாக சென்றுள்ளார். இவற்றில் 31 பயணங்களுக்கான செலவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வங்கதேசம், அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்ற பயணச்செலவை உள்துறை அமைச்சகம் ஏற்று கொண்டது. பிரதமர் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட 31 வெளிநாட்டு பயணச்செலவு ₹239 கோடியே 4 லட்சத்து 8 ஆயிரத்து 625 ஆகும்,’’ என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நிலுவையில் 10 ஆண்டுகளாக 11,000 வழக்குகள்

மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ``25 உயர்நீதிமன்றங்களில் 8.77 லட்சம் சிவில், 3.74 லட்சம் கிரிமினல் வழக்குகள், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 6.91 லட்சம் சிவில், 27.26 லட்சம் கிரிமினல் வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக 11,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளன,’’ என்று கூறினார்.

சிபிஐ டிஎஸ்பி நேரடி நியமனம் நாடாளுமன்ற குழு பரிந்துரை

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `சிபிஐ.யில் மொத்தம் 1,025 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 66 வழக்குகள் 5 ஆண்டுகளை கடந்துள்ளது. நேரடி நியமனம், பதவி உயர்வு, துறை சார்ந்த தேர்வுகள் மூலம் குறிப்பிட்ட சதவீதத்திலான இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி.க்கள் பணி நியமனம் அல்லது பதவி உயர்வு பெறுகின்றனர். எனவே, சிபிஐ இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி பதவிகளுக்கு சிபிஐ அமைப்பு நேரடியாக பணி நியமனம் செய்ய வழி வகுக்க வேண்டும்,’ என்று நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

Related Stories: