அடுத்த ஆண்டு ஓய்வில்லாமல் ஆடு இந்தியா ஆடு: மார்ச் 22 சென்னையில் ஆட்டம்

மும்பை: வங்கதேசத்தில்  ஒருநாள் தொடர் முடிந்ததும், இந்திய ஆடவர் அணி  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடர் டிச.26ம் தேதி முடிந்ததும்  நாடு திரும்பும் இந்திய அணி வீரர்களுக்கு சில நாட்கள்  மட்டும் ஓய்வு அளிக்கப்படும். அதன் பிறகு வரும் ஆண்டு முழுவதும்  உள்ளூரில் இந்தியா விளையாட உள்ள போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. இடையே வெளிநாடுகளிலும் இந்தியா விளையாட இருக்கிறது. பிசிசிஐ அறிவித்தபடி,  இங்கு வரும் இலங்கை அணியுடன்  ஜன.3ம் தேதி முதல் ஜன.15ம் தேதி வரை தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர்களில் இந்தியா விளையாட இருக்கிறது.  

இந்த ஆட்டங்கள் முறையே  மும்பை, புனே, ராஜ்காட், கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடக்கும். அதனையடுத்து நியூசிலாந்து அணி களம் காண இந்தியா வருகிறது. அந்த அணியுடன்  ஜன.18ம் தேதி முதல்  பிப்.1ம் தேதி வரை தலா 3 டி20, ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா விளையாடும். அந்த ஆட்டங்கள் முறையே ஐதராபாத், ராய்பூர், இந்தூர், ராஞ்சி, லக்னோ, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடக்கும். இந்தியாவுக்கு மூன்றாவது நாடாக வரும் ஆஸ்திரேலியா  இங்கு  4 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். இந்த தொடர்கள் நாக்பூர், டெல்லி,  தர்மசாலா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் முறையே பிப்.9, 17, மார்ச் 1, 9 தேதிகளில் தொடங்கும்.தொடர்ந்து இந்த 2 அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதும். இந்த ஆட்டங்கள்  மார்ச் 17ம் தேதி மும்பையிலும், மார்ச் 19ம் தேதி  விசாகப்பட்டினத்திலும், மார்ச் 22ம் தேதி சென்னையிலும் நடைபெறும்.

அதன் பிறகு 2 மாதங்கள் ஐபிஎல் தொடர்  ஆட்டங்கள் நடைபெறும். அதன் பிறகு இந்திய அணி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  பின்னர்   செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா எதிர்ப்பு காரணமாக அங்கு நடைபெறுமா  என்ற கேள்வி தொடர்கிறது. அடுத்து செப்டம்பர் மாதம் ஆஸி அணி மீண்டும இந்தியா வந்து  ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டு உள்ளது. அதனையடுத்து  அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. உலக கோப்பைக்கு பிறகு இங்கேயே தங்கும் ஆஸி டி20 தொடரில் விளையாடும். டிசம்பரில் இந்தியா வரும் தென் ஆப்ரிக்கா 2ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட், தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அது 2024 ஜனவரி மாதம் வரை நடக்கும்.

Related Stories: