×

காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்: முதல் காலிறுதி குரேஷியா-பிரேசில்.! 2வது காலிறுதி நெதர்லாந்து-அர்ஜென்டீனா

தோஹா: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில்  காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடக்கின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியின் 22வது தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. லீக் சுற்று, நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்று முதல்  காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. காலிறுதியில் விளையாட நடப்பு சாம்பியன் பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மொரோக்கோ, அர்ஜென்டீனா, பிரேசில், இங்கிலாந்து, குரேஷியா ஆகிய அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. இவற்றில் மொரோக்கோ மட்டுமே ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவவை. பிரேசில், அர்ஜென்டீனா ஆகிய இரு நாடுகள் தென் அமெரிக்க கண்டத்தில் இருப்பவை. மற்ற 5 நாடுகளும் ஐரோப்பிய  நாடுகள். ஆசிய, வட அமெரிக்க  நாடுகள் லீக், நாக் அவுட் சுற்றுடன் மூட்டையை கட்டி விட்டன. இன்று இரவு நடைபெறும் முதல் காலிறுதியில்  குரேஷியா-பிரேசில் அணிகளும்,  நள்ளிரவில் நடைபெற உள்ள 2வது காலிறுதியில் நெதர்லாந்து அர்ஜென்டீனா அணிகள் களம்  காண உள்ளன.
இவற்றில் வெற்றிப் பெறும் அணிகள்  அரையிறுதியில் களம் விளையாடும்.

இந்த 4 அணிகளில்  தென் அமெரிக்க அணிகளான  பிரேசில்(5), அர்ஜென்டீனா(2)  ஏற்கனவே சாம்பியன் பட்டம்  பெற்றவை. அதேபோல் நாளை இரவு நடைபெறும்  3வது காலிறுதியில்  மொரோக்கா-போர்ச்சுகல் அணிகளும், நள்ளிரவு நடக்க உள்ள 4வது காலிறுதியில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள்  மோத உள்ளன. இவற்றில் இங்கிலாந்து(1), பிரான்ஸ்(2)  அணிகள் முன்னாள் சாம்பியன்கள்.  இவை தவிர மற்ற 4 அணிகளும்  முதல்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் கனவில் இருப்பவவை. கூடவே காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் உலக தர வரிசையில் முன்னணியில் இருக்கும் அணிகள் என்பதால் இனி ஆட்டங்கள்  பரபரப்பான ஆட்டங்களாக இருக்கும். அதுமட்டுமின்றி முடிவு எப்படி இருந்தாலும் இந்த ஆட்டங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்கும் ஆட்டங்களாகவும் இருக்கும்.

உலகத் தரவரிசையில்  பிரேசில் உலகின் நெம்பர் ஒன் அணி மட்டுமல்ல இந்தக் கோப்பையுடன்  22 உலக கோப்பைகளிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில் மட்டும்தான். குரேஷியா 12வது இடத்தில் உள்ளது. பிரேசில்  7 முறை இறுதி ஆட்டத்தில் விளையாடி உள்ளது. அவற்றில் 1958, 1962, 1970, 1994, 2002ம் ஆண்டுகளில் என 5முறை கோப்பையை வென்றுள்ளது.  அதே நேரத்தில் குரேஷியா  7வது உலக கோப்பையில் விளையாடுகிறது.

முதல் முறையாக விளையாடிய 1998ம் ஆண்டு உலக கோப்பையில்  3வது இடம் பிடித்தது. தொடர்ந்து கடந்த  2018ம் ஆண்டு உலக கோப்பையில் 2வது இடம் பிடித்த அணி. அதனால் குரேஷியாவை குறைத்து மதிப்பிட முடியாது. அதே நேரத்தில்  இந்த 2 அணிகளும் இதுவரை  4 சர்வதேச ஆட்டங்களில் நேருக்குநேர்  சந்தித்துள்ளன. அவற்றில் 3 ஆட்டங்களில் பிரேசிலும், குரேஷியா ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன. அவற்றில் 2 ஆட்டங்கள்  2006, 2014ம் ஆண்டு உலக கோப்பையில் நடந்த ஆட்டங்கள். அந்த 2  ஆட்டங்களிலும் பிரேசில்தான் வென்றுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகத் தரவரிசையில்  3வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டீனா அணி இத்துடன் 18 உலக கோப்பைகளில் விளையாடி உள்ளது.  அவற்றில் 4 முறை இறுதி ஆட்டத்தில் விளையாடிய அர்ஜென்டீனா  1978, 1986ம் ஆண்டுகளில் கோப்பைகளை கைப்பற்றியது. உலகத் தரவரிசயைில் 8வது இடத்தில் உள்ள  நெதர்லாந்து உலக கோப்பையில்  11முறை களம் கண்டுள்ளது. அவற்றில்   1974, 1978,  2010ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறியது. அந்த  3முறையும்  2வது இடத்தைதான்  பிடித்தது. நீண்ட நாட்களாக நெதர்லாந்துக்கு உலக கோப்பை  கனவாகவே உள்ளது. எனவே  அர்ஜென்டீனாவுக்கு இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து  பெரும் சவாலாக இருக்கக் கூடும்.

இதற்கு முன்பு இந்த 2 அணிகளும் 9 முறை  சர்வதேச ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில்  நெதர்லாந்து 4ஆட்டங்களிலும், அர்ஜென்டீனா 3 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய 2 ஆட்டங்கள்  டிராவில் முடிந்துள்ளன. கூடவே 5 உலக கோப்பைகளில் இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் தலா 2 ஆட்டங்களில்  இரு அணிகளும் வெற்றி வாகை சூடியுள்ளன. ஒரு லீக் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.   அவற்றில்    2014ம் ஆண்டு இந்த அணிகள் மோதிய  அரையிறுதி ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் நடந்த ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அர்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Tags : Croatia ,Brazil ,Netherlands ,Argentina , Quarter-final matches start today: First quarter-final Croatia-Brazil.! 2nd quarter-final Netherlands-Argentina
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...