×

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து திமுக தரப்பில் பலமுறை வலியுறுத்தியும், கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார்.

இதனை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதற்கு மாற்றாக சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருப்பதாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டார். ஆனால் இதுபற்றி தொடர்ந்து பேச மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா அனுமதி மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Tags : DMK ,Lok Sabha , Online rummy ban bill, people's house, DMK members, walk out
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...