கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்!: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்..சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னை: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மாண்டஸ் புயல், தீவிர புயலாக உருவெடுத்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். தீவிர புயல் நாளை படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

* புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்.

* பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* புயல் எச்சரிக்கையால் பொதுமக்கள் சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிக்க வேண்டும்.

* காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

* தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் கீழ் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளனர்.

Related Stories: