அதிமுக பஞ். தலைவர் அரிவாளால் வெட்டிக்கொலை: தங்கையின் காதலனை பிரித்ததால் சகோதரன் வெறிச்செயல்

வலங்கைமான்: வலங்கைமான் அருகே ஊராட்சி தலைவர் அரிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். தங்கையின் காதலனை பிரித்து அசிங்கப்படுத்தியதால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது சகோதரன் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த வேப்பதாங்குடி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(55). அரவூர் ஊராட்சி தலைவர். அதிமுகவை சேர்ந்தவர்.

இவரது அண்ணன் மகன் சத்தியமூர்த்தி, இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சத்தியமூர்த்தி காதலியுடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சத்தியமூர்த்தி மற்றும் அந்த பெண்ணை வரவழைத்து பேசி, பிரித்து வைத்துள்ளனர்.  இதுதொடர்பாக பன்னீர்செல்வத்துக்கும், அந்த பெண்ணின் சகோதரர் இதே ஊரை சேர்ந்த  விஜய்க்கும்(23) முன்விரோதம் இருந்து வந்தது. தங்கையின் காதலனை பிரித்து வாழவிடாமல் அசிங்கப்படுத்தியதால் பன்னீர்செல்வத்தை விஜய் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.  

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் நீடாமங்கலம் மெயின் ரோட்டில் மேட்டு தெரு என்ற இடத்தில் நண்பருடன் பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பன்னீர்செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் பன்னீர்செல்வம் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து வந்த வலங்கைமான் போலீசார் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் மனைவி மனோன்மணி அளித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிந்து விஜயை கைது செய்தனர். பன்னீர்செல்வத்துக்கு மனைவி, அருள்மொழி, தேன்மொழி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: