திருமணத்திற்காக சென்றபோது சோகம்; டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலி: 19 பேர் படுகாயம்

திருமலை: திருமண விழாவில் பங்கேற்க சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜங்கலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் திருமணம் ஜெட்டிப்பள்ளி கிராமத்தில் இன்று காலை நடந்தது. இதற்காக ஜங்கலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 25 பேர் நேற்றிரவு டிராக்டரில் புறப்பட்டனர். லட்சுமய்யா கிராமம் அருகே இரவு 9 மணியளவில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த டிராக்டர் டிரைவர் சுரேந்திரரெட்டி(52), வசந்தம்மா(50), ரெட்டம்மா(31), தேஜா(25), வினீஷா(3), தேசிக்(2) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே  இறந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த சித்தூர் கலெக்டர் ஹரிநாராயணன், எஸ்பி ரிஷாந்த்ரெட்டி ஆகியோர் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: