வாட்ச், லேப்டாப், செல்போன் திருட்டு: ஆங்கிலோ இந்தியர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ் (44). கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, சாவியை அங்கிருந்த காவலாளியிடம் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றுள்ளார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது மேஜையில் வைத்திருந்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள 5 வாட்ச்கள், ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் ராஜேஷ் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் குடியிருப்பு வேலை செய்து வரும் காவலாளி மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் பைக்கில் வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்துவிசாரித்தபோது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கும் ராபர்ட் வோர்டு (26) என்பதும் ஆங்கிலோ இந்தியர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, குடியிருப்பில் தனியாக வசித்து வரும் இவர், ராஜேஷ் வீட்டில் திருட வந்தபோது ஜன்னல் ஓரத்தில் மற்றொரு சாவி இருப்பதை பார்த்துள்ளார். இது அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. சாவியை எடுத்து கதவை திறந்து விலைஉயர்ந்த வாட்ச்கள், லேப்டாப், செல்போனை திருடியுள்ளார். வாட்ச்களின் விலை மதிப்பு தெரியாததால் விற்காமல் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 5 வாட்ச்கள், லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராபர்ட் வோர்டுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: