பேரிடர் மீட்பு பணி மேற்கொள்ள முத்துப்பேட்டையில் தயார்நிலையில் 25 வீரர்கள்: கனமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 25 வீரர்கள் முத்துப்பேட்டையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலம் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவ மழை கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அளவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக புகார்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ள நிலையில் அதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இன்று (8ம்தேதி) முதல் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அதிகனமழை மற்றும் ரெட் அலர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறுகையில்:

மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான அனைத்து வட்டாரங்களுக்கும் ஒரு குழு அளவில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 209 பகுதிகளில் 55 பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளும், 83 பகுதிகள் மிதமான பகுதிகளும், 71 பகுதிகள் குறைவாக பாதிக்கக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு அதில் 249 நிவாரண முகாம்கள் அமைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாய உணவு மையங்கள்அமைத்திட 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுத்தலின்படி 4500 முதல் நிலை மீட்பாளர்களுக்கு, 3 கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகளில் அமைந்துள்ள 713 நியாயவிலைகடைகளுக்கு வெள்ளக்கால அத்தியாவசிய பொருட்கள் ஒரு மாதத்திற்கு இருப்பு வைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகளும், 84 ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 106 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 116 ஜே.சி.பி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

மீன்வளத்துறை மூலம் 50 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அனைத்துதுறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மாண்டஸ் புயல் சேதம் ஏற்ப்பட்டால் அதனை மேற்கொள்வதற்காக தேசிய மீட்பு படையினர் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு 25 வீரர்கள் வருகை தந்துள்ள நிலையில் இவர்கள் அனைவரும் மாவட்டத்தின் கடலோர பகுதியான முத்துப்பேட்டை பகுதியில் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

முத்துப்பேட்டைக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் பட்டாலியன் ஆப்ரேஷன் உதவி கமிஷனர் பிரவீன்குமார் அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆய்வாளர் ஹரிதேவ் பண்டர் தலைமையில் அரக்கோணத்தில் இருந்து நேற்று மீட்பு பணிக்காக 25பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு வந்துள்ளனர்.இவர்கள் கோவிலூர் பைபாஸில் உள்ள பயணிகள் விடுதியில் தங்கியுள்ளனர். மேலும் கடலோரத்தில் கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு இல்லத்தையும் தயார் நிலையில் அரசு அதிகாரிகள் வைத்துள்ளனர்.

மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதனையொட்டி மாவட்டத்தில் பேரிடர் பயிற்சி முடித்த போலீசார் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். அதன்படி, திருவாரூர் ஆயுதப்படை மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 5 உட்கோட்ட காவல் நிலையங்களிலும் தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் இந்த பேரிடர் குழுவானது இயங்கி வருகிறது.

அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 5 உட்கோட்டங்களிலும் தலா 10 போலீசார் வீதம் 50 பேர்களும், திருவாரூர் ஆயுதப்படை பிரிவில் 20 போலீசாரும் என மொத்தம் 70 போலீசார் இந்த பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

Related Stories: