நெருங்கி தைப்பொங்கல்: ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்.. திமிலை முறுக்கியபடி பயிற்சியில் சுழன்றடிக்கும் காளைகள்..!!

திண்டுக்கல்: தை திருநாள் நெருங்கி வருவதையொட்டி வத்தலக்குண்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தை போல வளர்க்கப்பட்ட காளைகள் திமிலை நிமிர்த்தி ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், முத்துலாபுரம், சித்துரேது, சித்தையன்கோட்டை பகுதிகளில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தை திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், வாடிவாசலில் சீறிப்பாய காளைகளும், திமிலை தழுவி காளைகளை அடக்க காளையர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் தற்காலிக வாடிவாசல் அமைத்தும், மண்களம் அமைத்தும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு வாரத்தில் ஒருநாள் நீச்சல் பயிற்சி, தினசரி இருவேளைகளில் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகள் கொம்புகளால் மண் குவியலை பிளந்து ஆக்ரோஷமாக பயிற்சி எடுத்து வருகின்றன. வட மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கும் காளைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

வட கயிறால் கட்டப்பட்டு களத்தில் சுழன்று அடிக்கும் காளைகள், பயிற்சியின்போது வீரர்களை ஒரு கை பார்த்துவிட திமிலை முறுக்கி நிற்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளும் நேரில் பார்வையிட வர வேண்டும் என்றும் காளை வளர்ப்பாளர்கள் அழைப்பு விடுகின்றனர்.

Related Stories: