பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வாடகைக்கு குடியிருந்த பெண் தப்பியோட்டம்

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் வீட்டில் பிளாஸ்டிக் பைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட பெண் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் கடந்த சில மாதமாக இரவு பகல் என பிளாஸ்டிக் பைகளில் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து இங்கே கொடுத்து விட்டு செல்வதாகவும், அவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கடத்தலுக்கு பயன்படுத்தி வருவதாகவும் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை டிஎஸ்பி நந்த குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், உணவு பாதுகாப்பு தனிப்படை போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் சம்மந்தப்பட்ட வீட்டினை சுற்றி வளைத்தனர். 3 மாடி அடுக்கு கொண்ட அந்த வீட்டின் கீழ் பகுதியில் மாடி படிக்கட்டு அடியில் மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரசி கட்டி வைத்திருந்தது போலீசார் சோதனையில் தெரிய வந்தது. தொடர்ந்து வீட்டின் கதவை திறக்க போலீசார் பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. மேல் மாடியில் இருப்பவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இந்த வீட்டில் உள்ள 3 மாடியில் அனைவரும் வாடகைக்கு குடியிருப்பதாகவும், கீழ் மாடியில் குடியிருக்கும் ஜோதி என்பவர் கணவரை பிரிந்து மகனுடன் குடியிருப்பதாகவும்  கூறியுள்ளனர்.

தொடர்ந்து, 60 மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் சுமார் 3 டன் கொண்ட ரேஷன் அரிசியை வேலூர் மாவட்ட சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர். மேலும், அரிசி கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவான ஜோதியை போலீசார் தேடி வருகின்றனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்பு?

பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் வாடகைக்கு குடியிருந்த பெண் தனது மகனுடன் சேர்ந்து ஆங்காங்கே வீடுகளில் கொடுக்கும் ரேஷன் அரிசியினை குறிப்பிட்ட தொகைக்கு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் சேகரித்து வைத்து வந்துள்ளார். மேலும், பள்ளிகொண்டாவில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு சம்திங் கொடுத்துவிட்டு பிளாஸ்டிக் பைகளில் மாலை 4 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து வீட்டில் வைக்கப்படுவதாகவும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பதுக்கி வைக்கும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கடத்தும் குறிப்பிட்ட ஏஜென்டுகளுக்கு தகவல் கொடுத்து வாரம் ஒருமுறை லோடு அனுப்பி வைப்பதாகவும் இதனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் இரவு நேரங்களில் தொந்தரவு அனுபவிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். எனவே, பள்ளிகொண்டா பகுதியில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்களை கண்டறிந்து களையெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: