திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் சைபர் கிரைம் ரேட்: எச்சரிக்கையாக இருக்கவும் போலீசார்அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாக இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் உடனே 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அதிகமாக நடந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டுகளின் விநரங்களை கேட்டு அறிந்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக சுருட்டும் சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக சைபர் கிரைம் குற்றங்கள் சற்று குறைய துவங்கியது.

ஹலோ..... நாங்க வங்கியிலிருந்து பேசுறோம்

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, வங்கிகளுக்கு நேரடியாக சென்று வந்த நிலை மாறி தற்போது ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதாவது வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை புதிப்பிப்பதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்டு) போன்ற விபரங்களை கேட்டு வரும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக வயதானவர்களை குறி வைத்து, அவர்களிடம் ஏ.டி.எம். கார்டு விபரங்களை பெற்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை சில மோசடி கும்பல் கொள்ளை அடித்து வருகிறது. பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பல்வேறு வகைகளில் மர்ம நபர்கள் சைபர் கிரைம் குற்றங்களை அரங்கேற்றி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் சமீபநாட்களாக சைபர் கிரைம் மோசடி குறித்த புகார்கள் குவிந்து வருகின்றன. இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ேவண்டும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மர்ம நபர்கள் மோசடியாக தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிவிட்டால் உடனே 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் பதிவு செய்ய வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறியோ, குறைந்த வட்டியில்  கடன் பெற்று தருவதாகவோ, பரிசு விழுந்திருப்பதாக கூறியோ வங்கி கணக்கு விபரங்கள், ஓ.டி.பி. எண் போன்ற விநரங்களை கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது. தனிப்பட்ட மற்றும் குடும்ப விபரங்களை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது. இவ்வாறு கூறினர்.

புதிய வகை மோசடி துவங்கியாச்சு

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி ஏடிஎஸ்பி சந்திரன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வகை மோசடியாக 4 ஜி சிம் வைத்திருப்பவர்களுக்கு 5 ஜி சிம் செல்போன் மூலம் அப்டேட் செய்து தருவதாக கூறி ஓ.டி.பியை பெற்று கொண்டு அவர்கள் புது சிம் வாங்கி கொண்டு தங்களது நமது தகவல்கள் மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தினை நூதன முறையில் திருடி மோசடி செய்கிறார்கள். மேலும் தற்போது புதிய வகை மோசடி தொடங்கியுள்ளது. யாரோ ஒருவர் உங்கள் கணக்கு அல்லது கூகுள் பேக்கு வேண்டுமென்றே பணத்தை அனுப்புகிறார்.

பணம் அனுப்பிய உடன் உங்களை அழைத்து இந்த பணம் உங்கள் கணக்கில் தவறுதலாக வந்திருப்பதாக சொல்லி பணத்தை அவர்களின் எண்ணிற்கு திருப்பி அனுப்புமாறு கூறுகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும். எனவே உங்கள் கணக்கில் யாரேனும் தவறாக பணம் அனுப்பியிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றிதழ் உடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்து கொள்ள சொல்லுங்கள்.ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: