மாண்டஸ் புயல் எதிரொலி!: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பு.. வழக்கத்தை விட சுமார் 6 அடி உயரம் வரை அலைகள் சீற்றம்..!!

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 580 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாண்டஸ் புயலானது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலானது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலுக்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரைகளிலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காற்றின் வேகம் இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயலால் தற்போது சென்னையில் கடல் அலைகள் சீற்றத்துடன் கொந்தளித்து வருகிறது. வழக்கத்தை விட சுமார் 6 அடி உயரம் வரை அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் சீற்றம் அதிகரித்திருக்கிறது.

கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர், கடல் அலையில் கால் நினைத்தும், செல்பி எடுத்தும் வருகின்றனர். கடலோர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: