இயற்கை, ஆன்மீகம், வீரத்திற்கு புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

தென்காசி: இயற்கை, வீரம், ஆன்மீகம், வேளாண்மைக்கு புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தென்காசியில் ரூ.182 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரூ.34 கோடியில் 23 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.22 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மீகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன். மாவீரன் பூலித்தேவன் பிறந்த வீரம் நிறைந்த மண் தென்காசிக்கு வருவதில் பெருமை கொள்கிறேன் என  கூறினார்.

இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் தென்காசி:

இயற்கை எழில் கொஞ்சக்கூடிய மாவட்டம் தென்காசி மாவட்டம். அதிக அளவில் அருவிகள், அணைகள் இருக்கும் மாவட்டம் தென்காசி என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். குற்றாலத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் சாரல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

ஒரே விழாவில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்:

தென்காசி விழாவில் ரூ.182.56 கோடியில் 1,03,508 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  

19 மாதங்களில் திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள்:

திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பூலித்தேவனுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர் என முதல்வர் கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க கல்லூரியை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டது தான் திமுக அரசு எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தென்காசி மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்:

தென்காசி மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். இனாத்தூர் பெரிய ஏரி சுற்றுலா தலமாக ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். புளியங்குடி - சங்கரன்கோவில் இணைப்பு சாலை மேம்படுத்தப்படும். தென்காசி மாவட்டத்துக்கு புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் 11,490 மனுக்களுக்கு தீர்வு:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 11,490 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 80 லட்சம் முறை கட்டணமின்றி நகரப்பேருந்துகளில் பெண்கள் பயணித்துள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: